ராஜ்கோட்: இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய நெடுஞ்சாலை ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பிட்ச் தான் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தாலும், ஒயிட் வாஷ் செய்து சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதேபோல் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த மைதானத்தில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் ஆடிய அணியே வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் மைதானத்தில் பவுண்டரிகள் ஃபைன் லெக் திசையில் 56 மீட்டர் தூரமும், தேர்ட் மேன் திசையில் 58 மீட்டர் தூரமும், ஆஃப் சைட் திசையில் 66 மீட்டர் தூரமும், லெக் சைட் திசையில் 67 மீட்டர் தூரமும் அமைந்துள்ளது.
இதில் பிட்ச்சும் தார் ரோடு போல் அமைந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி 6.1 ஓவர்களிலேயே 50 ரன்களை எட்டியது. அதேபோல் 11.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா பவர் பிளேவின் போது புதிய பந்தில் 4 ஓவர்கள் வீசி 45 ரன்களையும், முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். பும்ரா வீசிய 4வது ஓவரில் மட்டும் மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் விளாசினார். அதுமட்டுமல்லாமல் இருவராலும் ஒரு விக்கெட்டை கூட பவர் பிளேவின் போது வீழ்த்த முடியவில்லை.

இந்த நிலையில் இந்தப் போட்டியின் போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய நெடுஞ்சாலை ராஜ்கோட் பிட்ச் தான் என்று கூறி இருக்கிறார். அதேபோல் மற்றொரு வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே, பிட்சினை ரோடு போல் அமைக்க முடிவு செய்துவிட்டால், குறைந்தபட்சம் பவுண்டரி எல்லைகளையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் அனைத்து மைதானங்களின் பவுண்டரி எல்லையும் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன் பிசிசிஐ இப்படியான பிட்சை அமைத்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனங்களை அதிகரித்துள்ளது.