டெல்லி : பிசிசிஐ நடத்தும் பிரதான கிரிக்கெட் தொடரில் ரஞ்சி கோப்பை தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக ரஞ்சி கோப்பை கருதப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு மட்டும் தான் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் ஐபிஎல் தொடரின் வருகைக்குப் பிறகு ரஞ்சி கோப்பையின் முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்துவிட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு இந்திய அணியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

ரஞ்சி கோப்பையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் பல ஸ்டார் வீரர்கள் ரஞ்சிப் போட்டி பக்கமே வருவதில்லை. இதனால் விராட் கோலி,ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்றவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ரஞ்சிப் போட்டியில் விளையாட வேண்டும் என கடந்த ஆண்டு பிசிசிஐ உத்தரவிட்டது.
எனினும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகின்றனர். இதற்கு இந்த ஸ்டார் வீரர்கள் ரஞ்சி போட்டியில் விளையாடாமல் இருப்பது தான் காரணம் என்று புகார் இருந்தது. சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான் தன்னுடைய கடைசி சர்வதேச தொடருக்கு முன்பு கூட டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் ரஞ்சி போட்டியில் களம் இறங்கினார்.
ஆனால் இந்திய அணியில் தற்போது இருக்கும் ஸ்டார் வீரர்கள் ரஞ்சிப் போட்டி பக்கம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் எந்தெந்த ஸ்டார் வீரர்கள் கடைசியாக ரஞ்சிப் போட்டியில் எப்போது விளையாடினார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். விராட் கோலி கடைசியாக ரஞ்சிப் போட்டியில் 2012 ஆம் ஆண்டு விளையாடினார்.
இது சச்சின் டெண்டுல்கர் கடைசியாக விளையாடியதை விட மிகவும் அதிகமாகும். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக 2015 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் விளையாடினார். ரோகித் ரஞ்சிப் போட்டுக்கு திரும்பி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ரிஷப் பண்ட் 2017 ஆண்டும், பும்ரா 2017 ஆண்டும் கடைசியாக ரஞ்சி போட்டியில் விளையாடினர்.
ஹர்திக் பாண்டியா 2018 ஆண்டும், கே எல் ராகுல் 2020 ஆவது ஆண்டும் ரஞ்சிப் போட்டியில் விளையாடினார்கள். இந்திய அணியின் ஸ்டார் வீரர்களில் ஒருவரான கில் 2022 ஆவது ஆண்டும், ஜடேஜா 2023 ஆவது ஆண்டும், ஜெய்ஸ்வால் 2023 ஆம் ஆண்டும் ரஞ்சிப் போட்டியில் கடைசியாக விளையாடினார்கள். ஸ்டார் வீரர்கள் அனைவரும் ரஞ்சிப் போட்டிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து இருக்கிறது.