ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷ் துபே அபாரம்
நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில், விதர்பா அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே ஒரே இன்னிங்சில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வாழ்நாளின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் இவர் ஈர்த்துள்ளார்.
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த எலைட் பிரிவு போட்டியில், மத்திய பிரதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷ் துபேவின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் நாசிகேத் பூதே கைப்பற்றினார்.

அதன் பிறகு ஹர்ஷ் துபே தனது சிறப்பான சுழற்பந்து வீச்சால் மத்திய பிரதேச அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சரித்தார். 23.1 ஓவர்கள் வீசிய அவர், 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் இந்திய சர்வதேச வீரர் ரஜத் படிதார் மற்றும் சரண்ஷ் ஜெயின் ஆகியோரின் விக்கெட்டுகளும் அடங்கும்.
இதற்கு முன்னதாக, 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாக்பூரில் ஹிமாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே ஹர்ஷ் துபேவின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. தற்போது 53 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ரஞ்சி கோப்பை வரலாற்றில் விதர்பா பந்துவீச்சாளர் ஒருவர் பதிவு செய்த மிகச்சிறந்த பந்துவீச்சு என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
சிறு காயத்தால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் சிகிச்சை பெற்று மீண்டு வந்த ஹர்ஷ் துபே, ரஞ்சி கோப்பைத் தொடருக்கு முன்பாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூத்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுடன் மானவ் சுதர் போன்ற இளம் வீரர்களும் தேசிய அணி வாய்ப்புக்கான போட்டியில் இருக்கும் சூழலில், ஹர்ஷ் துபேவின் இந்த தொடர்ச்சியான விக்கெட் வேட்டை தேர்வாளர்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications


