RCB vs GT Final: ஆர்சிபி-க்கு ஆரம்பமே வெற்றி.. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் நீக்கம்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ் வென்றதால் பெங்களூரு அணிக்கு ஆரம்பமே வெற்றி என அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டார்.
இரு அணி வீரர்கள் பட்டியல்
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, ககிசோ ரபாடா, அர்ஷத் கான், முகமது சிராஜ்.
மாற்று வீரர்கள் (இம்பாக்ட் பிளேயர்): பிரசித் கிருஷ்ணா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, சாய் கிஷோர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், குருணால் பாண்டியா, டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஸ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், ஜேக்கப் டஃபி, ரசிக் சலாம்.
மாற்று வீரர்கள் (இம்பாக்ட் பிளேயர்): வெங்கடேஷ் ஐயர், கனிஷ்க் சோஹன், ஸ்வப்னில் சிங், அபிநந்தன் சிங், ஜோர்டான் காக்ஸ்.

கேப்டன்கள் பேச்சு
டாஸ் வென்ற பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார், "இது ஒரு சிறந்த ஆடுகளம். ஆட்டம் நடைபெறும் 40 ஓவர்களும் இந்த ஆடுகளம் மாறாது என்றே கருதுகிறேன். எனவே அவர்களைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த முயற்சிப்போம். கடந்த கால வெற்றிகளை விட, தற்போது நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். மைதானத்தில் கூடியுள்ள ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குப் பெரிய பலம். நாங்கள் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களம் காண்கிறோம்" என்றார்.
குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங்கைத் தான் தேர்வு செய்திருப்போம். முதலில் அதிக ரன்களைக் குவித்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆடுகளத்தில் இது 3-வது போட்டி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் 2 முதல் 3 ஓவர்கள் சாதகமாக இருக்கும். உலகின் மிகப்பெரிய மைதானத்தில் விளையாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். சாய் கிஷோருக்குப் பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
ஆடுகளம் எப்படி?
அகமதாபாத் மைதானத்தின் 6-வது எண் கொண்ட பிட்ச்சில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. மைதானத்தின் இருபுறமும் எல்லைக் கோடுகள் 66 மீட்டர் தொலைவில் உள்ளன. இது கலப்பு மண் கொண்ட பிட்ச் என்பதால் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும். அதே சமயம், பிட்ச் சற்று மந்தமாக இருக்க வாய்ப்புள்ளதால் சுழற்பந்து வீச்சுக்கு அவ்வளவாக ஒத்துழைக்காது. வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லெந்தில் பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.


Click it and Unblock the Notifications