Rohit Sharma: ஐபிஎல் சரித்திரத்திலேயே மோசமான ரெக்கார்டை செய்த ரோஹித் சர்மா.. டக் அவுட்டில் சாதனை
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மோசமான சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மும்பை அணியின் கடைசி லீக் போட்டியில் 4 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா, ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்ததன் மூலம் இந்த தேவையற்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே, பந்தைச் சரியாகக் கணிக்கத் தவறிய ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2026 ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் போட்டியில் ரோஹித் சர்மா இப்படி ஏமாற்றத்துடன் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 19-வது முறையாக ரோஹித் சர்மா 'டக்-அவுட்' ஆகி உள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19 முறை டக்-அவுட் ஆகி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோஹித் சர்மா அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 18 முறை டக்-அவுட் ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளனர். ரஷித் கான் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் 16 முறையும், அஜின்க்யா ரகானே 15 முறையும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
முன்னதாகப் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் 38 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 ரன்களும் எடுத்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஜோப்ரா ஆர்ச்சர் 15 பந்துகளில் 32 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 19 ரன்களும் எடுத்து அணியின் ஸ்காரை உயர்த்தினர். மும்பை அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்து ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என போராடிய நிலையில், ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.


Click it and Unblock the Notifications
