மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை விளாசி வருகின்றனர் ரோகித் சர்மாவின் ரசிகர்கள்.
மூத்த வீரர், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ரோகித் சர்மாவை மதிக்காமல் அவரை வெளியே அமர வைத்ததால் தான் இந்த தோல்வி அடைந்தது என ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்ததையும் நினைவுபடுத்தி அதற்கு கிடைத்த பரிசு என கூறி உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இளம் கேப்டனை நோக்கி செல்கிறோம் என்ற அடிப்படையில் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கியது. அதே சமயம், ரோகித் சர்மா அந்த அணியில் ஒரு இம்பாக்ட் பிளேயராக மட்டுமே இடம் பிடித்து வருகிறார்.
அதாவது ரோகித் பேட்டிங்கின் போது மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசும் போது அவர் வெளியே அமர வைக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல் தகுதி டி20 போட்டிகளில் ஃபீல்டிங் செய்யும் அளவுக்கு இல்லை என்பதே இதற்கான மறைமுகமான காரணமாக கூறப்படுகிறது.
அதே சமயம், ரோகித் சர்மா தான் அந்த அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து இருக்கிறார். ஆடுகளத்தில் இருக்கும் போது, முக்கியமான நாக் அவுட் போட்டிகளின் போது என்ன செய்ய வேண்டும், அந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர்தான் 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கேப்டனாக இந்திய அணியை வெற்றிக்கு வழி நடத்தினார்.
இந்த நிலையில், அனுபவம் வாய்ந்த கேப்டனான ரோகித் சர்மாவை வெளியே அமர வைத்ததால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது என அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால், தான் அவரை விட சிறந்த கேப்டன் என நினைத்து அவரை ஒவ்வொரு முறையும் புறக்கணித்து வந்தது இந்த மோசமான நிலைக்கு காரணம் என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்த்தனே மற்றும் அந்த அணியின் உரிமையாளர்கள் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆர்வமாக இருந்தனர். தற்போது நாக் அவுட் போட்டியில் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இதுவே ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி செய்த துரோகத்துக்கு அவர்களுக்கு கிடைத்த பரிசு எனவும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.