ரோகித் சர்மா என்ன சோம்பேறியா? அவருக்கு என்ன பிரச்சினை இருக்கு தெரியுமா? EX பயிற்சியாளர் கருத்து
மும்பை: முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சோம்பேறி என்றும், முறையாக பயிற்சி செய்வதில்லை என்றும் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் உடல்தகுதிப் பயிற்சியாளர் சோஹம் தேசாய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2017-ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட இடுப்புப் பகுதி காயமே, அவர் குறிப்பிட்ட வகை பயிற்சிகளை மேற்கொள்வதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய சோஹம் தேசாய், "ரோஹித் சர்மா சோம்பேறி, உடல் எடை அதிகம் உள்ளவர், பயிற்சி செய்யமாட்டார் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு இடுப்பு மற்றும் தொடை தசையில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்" என்று கூறினார்.

கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக ரோஹித்தின் இடுப்புப் பகுதி பலவீனமான இடமாகவே உள்ளது. வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை Strength Training பயிற்சிகளை அவர் செய்யாவிட்டால், காயம் மீண்டும் தீவிரமடையும் ஆபத்து உள்ளது. அவர் கடினமாக உழைக்கவில்லை என்றால் இத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நிலைத்திருக்க முடியாது என்றும் தேசாய் விளக்கியுள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் உடல்தகுதி தேவைகள் முற்றிலும் மாறுபட்டவை என்று சோஹம் சுட்டிக்காட்டினார். விராட் கோலிக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக ஓட்டப் பயிற்சிகள் தேவையில்லை. அடிப்படை வலிமைப் பயிற்சிகளே போதுமானது. ஆனால், ரோஹித் சர்மாவுக்கு பழைய காயத்தின் காரணமாக, வலிமைப் பயிற்சிகளும், தொடை தசைகளை சீராக வைத்திருக்க அடிப்படை ஓட்டப் பயிற்சிகளும் அவசியமாகின்றன.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால், ரோஹித் சர்மாவுக்கு தற்போது தனது உடல்தகுதி மற்றும் பணிச்சுமையை சிறப்பாக நிர்வகிக்க நேரம் கிடைக்கிறது. 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை இலக்காக கொண்டு செயல்படும் அவர், இந்த சிறப்புப் பயிற்சிகளின் மூலமே சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார்.


Click it and Unblock the Notifications


