ரோஹித் சர்மாவுக்கு முன்பே 500 சர்வதேச போட்டிகள் ஆடிய வீரர்கள் யார், யார்? ஜாம்பவான்கள் பட்டியல்
பெர்த்: இந்திய கிரிக்கெட்டின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, தனது 18 ஆண்டு கால நீண்ட சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், ஒரு பிரம்மாண்டமான மைல்கல்லை எட்டியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் அவர் களமிறங்கியபோது, அது அவரது 500-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. இதன் மூலம், 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 11 கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைப் பட்டியலில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
2007-ஆம் ஆண்டு, ஜூன் 23 அன்று, அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஒரு இளம் வீரராக இந்திய அணிக்குள் நுழைந்த ரோஹித் சர்மாவின் பயணம், சவால்கள் நிறைந்தது. 67 டெஸ்ட், 274 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகள் என மூன்று வடிவங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ள அவர், டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர் என்ற உலக சாதனையையும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக நான்காவது அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.

500+ சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 11 ஜாம்பவான்கள்:
கிரிக்கெட் உலகில், 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. அது, ஒரு வீரரின் உடற்தகுதி, தொடர்ச்சியான ஃபார்ம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சான்றாகும். அந்தப் பிரத்யேகப் பட்டியலில் இடம்பிடித்த 11 வீரர்கள் இதோ:
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா, 664): 24 ஆண்டு காலப் பயணத்தில், 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- மகிளா ஜெயவர்த்தனே (இலங்கை, 652): 149 டெஸ்ட், 448 ஒருநாள் மற்றும் 55 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- குமார் சங்ககாரா (இலங்கை, 594): 134 டெஸ்ட், 394 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
- சனத் ஜெயசூர்யா (இலங்கை, 586): 22 ஆண்டு காலப் பயணத்தில், 586 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா, 560): 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஒரே ஆஸ்திரேலிய வீரர். மொத்தம் 560 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
- விராட் கோலி (இந்தியா, 551): தற்போதைய இந்திய அணியின் ஜாம்பவான்.
- எம்.எஸ். தோனி (இந்தியா, 538): இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன். 538 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
- ஷாஹித் அஃப்ரிடி (பாகிஸ்தான், 524): 500-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய ஒரே பாகிஸ்தான் வீரர். 524 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
- ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா, 519): உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். 519 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
- ராகுல் டிராவிட் (இந்தியா, 509): 'தி வால்' என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர். 509 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
- ரோஹித் சர்மா (இந்தியா, 500): இந்தப் பிரத்யேக கிளப்பில் இணைந்திருக்கும் சமீபத்திய ஜாம்பவான்.
சோகத்தில் முடிந்த 500-வது போட்டி
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், 500 சர்வதேசப் போட்டிகள் என்பது அவரது கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். சச்சின், கோலி, தோனி, டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் பட்டியலில் தனது பெயரைப் பதிவு செய்துள்ள இந்தத் தருணம், ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனை ஆகும்.


Click it and Unblock the Notifications