மும்பை: கிரிக்கெட் உலகின் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, விராட் கோலி என பல தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் நிலையில், நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வித்தியாசமான பதிலை கூறி இந்த விவாதத்தை மேலும் சூடேற்றி இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர்தான் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ள ஸ்மித், ஆனால் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் (Greatest Cricketer) அவர் இல்லை என்று கூறி, தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பிபிசி ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஸ்டீவ் ஸ்மித்திடம், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்மித், முதலில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் பெயரைச் சொல்லிவிட்டு, பின்னர் சட்டென தனது பதிலை மாற்றிக்கொண்டார்.
"நான் ஜாக் காலிஸை சொல்வேன்... மன்னிக்கவும், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் (Greatest Cricketer) ஜாக் காலிஸ். அதே சமயம், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் (Greatest Batter) என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்" என்று ஸ்டீவ் ஸ்மித் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஸ்டீவ் ஸ்மித், 'சிறந்த பேட்ஸ்மேன்' மற்றும் 'சிறந்த கிரிக்கெட் வீரர்' ஆகிய இரு பட்டங்களையும் வெவ்வேறு வீரர்களுக்கு வழங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பேட்டிங்கில் சச்சினின் சாதனைகளை யாராலும் மறுக்க முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் 34,357 ரன்கள், 100 சதங்கள் என எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என அவரது சாதனைகள் இன்றும் அசைக்க முடியாதவையாக உள்ளன. இதை அங்கீகரிக்கும் வகையிலேயே ஸ்மித், சச்சினை சிறந்த பேட்ஸ்மேனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால், ஒரு 'சிறந்த கிரிக்கெட் வீரர்' என்பவர் பேட்டிங்கில் மட்டுமல்லாது, பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார்.
19 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய காலிஸ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு வடிவங்களிலும் 10,000 ரன்களுக்கு மேல் மற்றும் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 25,534 ரன்கள் குவித்ததோடு, பந்துவீச்சில் 577 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.
காலிஸின் இந்த ஆல்ரவுண்ட் திறமையை கருத்தில் கொண்டே, ஸ்டீவ் ஸ்மித் அவரை 'கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்' என்று குறிப்பிட்டுள்ளார். நவீன கிரிக்கெட்டின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தின் இந்தக் கருத்து, சச்சின் மற்றும் காலிஸ் ரசிகர்களிடையே புதிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது.