2003 உலகக்கோப்பை தொடர்.. சச்சினுக்கு கொடுக்கப்பட்ட கோல்டன் பேட்.. இப்போ எங்க இருக்கு தெரியுமா?
சென்னை: 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்கு தங்க பேட் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த பரிசை சச்சின் டெண்டுல்கர் என்ன செய்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. உலகக்கோப்பை தொடர் என்றாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு 2003 மற்றும் 2011 ஆகிய தொடர்கள் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் 2003ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியை யாராலும் மறக்க முடியாது.

அந்த தோல்விக்கு பின் இந்திய ரசிகர்கள் எதையும் தாங்கும் நெஞ்சங்களாகவே மாறினர் என்று கூறலாம். அப்படியொரு அடியை ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு கொடுத்தது. அந்த 2003 உலகக்கோப்பை தொடரில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 673 ரன்களை குவித்தார். இன்று வரையும் உலகக்கோப்பை தொடரில் தனியொரு வீரரால் விளாசப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான்.
இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதற்காக தங்க பேட் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இன்றும் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படங்களில் தங்க பேட் உடன் அவர் இருக்கும் புகைப்படம் அதிக பிரசித்தி பெற்றது. அதன்பின் எந்த வீரருக்கும் அப்படியான விருது வழங்கப்படவில்லை. அந்த தங்க பேட்டை சச்சின் என்ன செய்தார் என்றும் இதுவரை தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டு வரும் குட்டி ஸ்டோரி வீடியோகளில் சச்சின் டெண்டுல்கரின் தங்க பேட் குறித்து ஹர்ஷா போக்ளே தகவல் தெரிவித்துள்ளார். ஐசிசி தரப்பில் அளிக்கப்பட்ட தங்க பேட்டை தனது உணவகம் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார். வழக்கமாக கஷ்டப்பட்டு பெறும் விருதுகளை வீரர்கள் அனைவரும் வீட்டிலேயோ அல்லது தங்களுக்கு நெருக்கமான இடத்திலேயோ வைத்திருப்பார்கள்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் சாதாரணமாக மக்கள் பார்வையில் படும்படி தனது உணவகத்தில் வைத்துள்ளார். இதுகுறித்து ஹர்ஷா போக்ளே கூறுகையில், சச்சின் டெண்டுல்கரை பொறுத்தவரை அவ்வளவு பெரிய தங்க பேட்டினை விடவும் சிறிய பதக்கம் தான் பெரியது. அந்த பதக்கத்தை அவரால் பெற முடியவில்லை என்று சோகமடைந்தார். அவருக்கு சொந்த சாதனைகளை விடவும் வெற்றிகள் மீது தான் கவனம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications