மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியை பார்த்து மும்பை இந்தியன்ஸ் காப்பியடிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் தூல் தெரிவித்துள்ளார். ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பாதியில் சொதப்பி இருந்தாலும் தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
குறிப்பாக சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், நேஹல் வதேரா ஆகியோர் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடர்ந்து 200 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி வெற்றிகரமாக மூன்று முறை சேசிங் செய்துள்ளது.ஆனால் ரோகித் சர்மா தற்போது மோசமான பார்மில் இருக்கிறார். கடைசியாக விளையாடிய ஐந்து போட்டியில் ரோகித் சர்மா வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் மும்பை குறித்து பேசிய சைமன் தூல், ஒரு வீரர் ரன் குவிக்காமலேயே அந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தால் சம்பந்தப்பட்ட வீரர் மீது அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. இதை தான் வாட்சன் மீது சிஎஸ்கே அணி செய்தது. 2018 -19 ஆம் ஆண்டு தொடர்களில் வாட்சன் பெருமளவில் சரியாக விளையாடவில்லை.
ஆனால் தொடர்ந்து வாட்சன் மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்தது. இதனை அடுத்து இறுதிப் போட்டியில் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வாட்சன் காப்பாற்றி சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அதை தான் செய்து கொண்டிருக்கிறது. இஷான் கிஷன் தொடக்கத்தில் அடித்து ஆடுவது பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால் அது ரோகித் சர்மாவுக்கு எடுபடவில்லை.
இப்போது திலக் வர்மா உடல் தகுதியை பெற்று மீண்டும் அணிக்குள் வந்தால் நீங்கள் யாரை வெளியே அனுப்புவீர்கள். ஏனென்றால் நீங்கள் வதேராவை தற்போது சிறப்பாக விளையாடி வருவதால் அவரை உங்களால் நீக்க முடியாது. இந்த சீசனின் முதல் பாதியில் தடுமாறியும் அடுத்த பாதியில் பிரம்மாண்டமாகவும் சூரியகுமார் விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது நம்பவே முடியவில்லை. அவர் அடிக்கும் சிக்ஸர்கள் எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கிறது என்று சைமன் தூல் கூறியுள்ளார்.