டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றியதை அடுத்து இந்தியாவில் தீவிரவாத மிரட்டல் குறைந்து விட்டதாக கருத முடியாது. மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஐபிஎல் டுவென்டி-20 தொடர் இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கவிருந்ததை அடுத்து உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என கருதியது. இதையடுத்து ஐபிஎல் தொடரை தேர்தலுக்கு பின் நடத்துமாறு அறிவுறுத்தியது.
ஆனால், இதை மறுத்துவிட்ட ஐபிஎல் தலைவர் லலித் மோடி, தொடர் தென் ஆப்ரிக்காவில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் என அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏவின் நிழல் என்றழைக்கப்படும் ஸ்டிரேட்பார் என்ற நிறுவனம் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளன.
அந்நிறுவனத்தில் செய்தி குறிப்பு ஒன்றில்,
ஐபிஎல் தொடரை தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றிவிட்டதால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என கருதிவிட முடியாது.
ஐபிஎல் தொடரும், தேர்தலும் ஒரே சமயத்தில் நடந்திருந்தால் நிச்சயம் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டிருக்கும். மும்பை தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக ஐபிஎல் அமைந்திருந்தது.
கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்...
இது தொடர்பாக சில இந்திய புலனாய்வு நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களுக்கும், வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு குறைவிருப்பதாக மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தன.
சமீபத்தில் கராச்சியில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் மூலம் உலகத்தின் பார்வையை தங்கம் பக்கம் திருப்பிய தீவிரவாதிகள் கிரிக்கெட் வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருந்த கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தை வீரர்கள் சிலரும் மிரட்டப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகத்துக்கு ஆபத்து...
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை. பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரங்களில் வெளிநாட்டினரும் அதிக வசித்து வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் காலூன்றி இருக்கும் இங்கு தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பது அவர்களது நோக்கம். இவ்விரு மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இதனால் மத்திய அரசு ஐபிஎல் தொடரை ஒத்திவைக்க சொல்லி இருக்கிறது. ஐபிஎல் தொடரை தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றியுள்ளதால் இந்தியா தேர்தலுக்கு முழு பாதுகாப்பு படையையும் பயன்படுத்தி கொள்ள முடியும். தேர்தல் சமயத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் ஓட்டு சாவடிகள் ஆகியவை தாக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
தேர்தலின் போது தங்களை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளின் பிரச்சாரத்தை விட தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அனைத்து கட்சியினருக்கும் உள்ளது என்கிறது அந்நிறுவனம்.