போர்ட் எலிசபெத்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சையும் வென்றன.
ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்து முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க வீரர்களாக வந்த மெக்கலம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை போல் பேட் செய்தார். 31 பந்துகளை வீணடித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ரன்வேகம் மந்தமாகி போனது. கெய்ல் 17, கங்குலி 22 ரன்கள் எடுத்தனர்.
கடைசி நேரத்தில் ஹாட்ஜ் அதிரடியாக விளையாட கொல்கத்தா 150 ரன்களை தாண்டியது. ஹாட்ஜ் 1 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 43 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த பஞ்சாப் அணிக்கு சங்ககரா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். சோஹல் 25, காடிச் 34 ஓரளவு ரன்கள் சேர்த்து, பெவிலியன் திரும்பினர். கேப்டன் யுவராஜ் 14 ரன்களுக்கு அவுட்டானாரா. அடுத்து வந்த ஜெயவர்தனா சூப்பராக பேட் செய்தார். அவர் 41 பந்தில் 52 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அணிக்கு திரில் வெற்றி தேடி தந்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பெங்களூர் அபாரம்...
இரண்டாவது போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், கும்ளை தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு துவக்கம் நன்றாக அமையவில்லை. சச்சின் 11, ரகானே 0, டுமினி 1 ரன்னுக்கு அவுட்டானார்கள். இதையடுத்து மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.
அடுத்து வந்த பிராவோ, ஜெயசூர்யாவுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார். அசத்தலாக பேட் செய்த ஜெயசூர்யா 1 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 43 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். பிராவோ 40 பந்தில் 50, அபிஷேக் 20 பந்தில் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
காலிஸ், உத்தப்பா அதிரடி...
அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு வாசிம் ஜாபர் 7 ரன்களுக்கு அவுட்டானார். மூன்றாவது வீரராக வந்த உத்தப்பா, காலிசுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க பெங்களூர் வெற்றியை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற துவங்கியது.
வழக்கத்துக்கு மாறாக அதிரடி காட்டிய காலிஸ் 2 சிக்சர் 5 பவுண்டரி உட்பட 59 பந்தில் 69 ரன்கள், உத்தப்பா 42 பந்தில் 66 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் அணி 18.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.
பீட்டர்சன் நாடு திரும்பியநிலையில் புதிய கேப்டன் கும்ளே தலைமையில் பெங்களூர் அணி கலக்கி வருகிறது.