சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கங்குலி அணியை வீழ்த்தியது.
முன்னதாக, டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டி இன்று மாலை 4 மணியளவில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் துவங்கியது.
இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளை குவித்துள்ளதால் இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை குவிக்கப்போவது யார்? என்பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற கங்குலி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் கங்குலியும் மெக்குல்லமும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மெக்குல்லம் 12 பந்துகளில் 24 ரன்களை அதிரடியாகக் குவித்தார். இதில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். ஸ்கோர் 32 ஆக இருந்தபோது அவர் அவுட்டானார். அடுத்து வந்த ரிக்கி பாண்டிங் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். 2 விக்கெட்டுகளையும் ஓரம் வீழ்த்தினார்.
இதையடுத்து கங்குலியுடன் சாஹா ஜோடி சேர்ந்தார். அவர் 27 ரன்களை எடுத்து கோனி பந்துவீச்சில் அவுட்டானார். இதைத் தொடர்ந்து கங்குலி 12 ரன்களுக்கும், ஹஸ்ஸி பூஜ்ஜியத்துக்கும் அவுட்டானார்கள். இதையடுத்து மளமளவென விக்கெட்டுகள் வீழ்ந்தன. சுக்லா அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை குவித்தனர்.
சென்னை கிங்ஸ் அணி பௌலர்களில் ஓரம் 3 விக்கெட்டுகளும், கோனி, அமர்நாத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சர்மா 1 விக்கெட் எடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஹேய்டன், பார்த்தீவ் படேல் அடுத்து களம் இறங்கினர். படேல் 27 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 3 பவுண்டரிகள்.
2வது விக்கெட்டுக்கு ஹேய்டனுடன் கேப்டன் டோணி ஜோடி பிரமாதமாக ஆடினர். ஹேய்டன் பந்துகளில் 70 ரன்களை குவித்தார். டோணி 43 ரன்களை எடுத்தார். 17 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியை தேடித்தந்தார் டோணி. இதன்மூலம் ஐபிஎல் போட்டி தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்றும் வரும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. இது ஹாட்ரிக் வெற்றியாகும்.