கொல்கத்தா: இதுவரை தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று கங்குலி தலைமையிலான வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இப்போட்டியிலாவது மும்பை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வருகிறது. கேப்டன் சச்சின் டெண்டுல்கர் இல்லாத நிலையில் ஹர்பஜன் சிங் தலைமையில் 3 போட்டிகளில் தோற்றது. நான்காவது போட்டியை ஷான் போலாக் தலைமையில் சந்தித்து அதிலும் தோல்வியுற்றது.
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் நடைபெறும் ஐந்தாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டியிலும் சச்சின் விளையாடுவார் எனத் தெரியவில்லை. போலாக் கேப்டனாக பொறுப்பு வகிக்கவுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வலுவானதாக இருக்கிறது. இதுவரை மோதிய போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கொல்கத்தாவும், மும்பையும் சந்திக்கின்றன. இன்றைய போட்டியில் வென்றால்தான் அரை இறுதியைப் பற்றி யோசிக்கலாம் என்ற நிலையில் மும்பை அணி உள்ளது.
மும்பை அணியில் இதுவரை ராபின் உத்தப்பா மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடி வருகிறார். ஜெயசூர்யா, இருக்கிறாரா என்பதே தெரியாத அளவுக்கு சொதப்பிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய போட்டியில் மும்பை வெல்லுமா அல்லது கொல்கத்தாவுக்கு பிரேக் கொடுக்க உதவுமா என்பதை 8 மணிக்குத் தொடங்கும் போட்டியில் காணலாம்.