தீப்பொறி பறக்காவிட்டாலும்.. சாதனையைப் பறிக்க தவறாத சச்சின்
மும்பை: 6வது ஐபிஎல் தொடரில் தீப்பொறி பறக்க சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஆடவி்ல்லையென்றாலும் கூட சத்தம் போடாமல் ஒரு சாதனையை செய்து விட்டார்.
அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரராக சச்சின் உருவெடுத்துள்ளார். நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின்போதுதான் இந்த சாதனையைப் படைத்தார் மும்பை இந்தியன்ஸ் வீரரான சச்சின்.
நேற்றைய போட்டியில், சச்சின் 28 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். அதில் 8 பவுண்டரிகளும் அடக்கம்.. அதில்தான் இந்த புதிய சாதனையும் அடங்கியிருந்தது.

ஆக மொத்தம் 289
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தம் 289 பவுண்டரிகளை விளாசியுள்ளார் சச்சின். இது புதிய சாதனையாகும்.

8வது முறையாக ஆட்டநாயகன்
அதேபோல ஐபிஎல் வரலாற்றில் நேற்று பெற்ற ஆட்ட நாயகன் விருதையும் சேர்த்து மொத்தம் 8 முறை அந்த விருதைப் பெற்றுள்ளார் சச்சின்.

கம்பீருக்கு 7வது முட்டை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர், நேற்று டக் அவுட் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் அவர் டக் அவுட் ஆவது இது 7வது முறையாகும்.

ஒரே அணியிடம் 10வது வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று மும்பை பெற்றது 10வது வெற்றியாகும். இதுவும் ஒரு சாதனையாகும். அதாவது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியை இன்னொரு அணி 10 முறை தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும்.

50 டாஸ் வென்ற முதல்அணி
மும்பை அணி நேற்று இன்னொரு சாதனையையும் செய்தது. அதாவது 50 டாஸ்களை வென்ற முதல் அணியாக அது உருவெடுத்தது.


Click it and Unblock the Notifications