வயதாவதால் பிரச்சினை இல்லை-சச்சின்

மெல்போர்ன்: டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கும், வயதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்குரிய திறமையோடு இருப்பதாகவே உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டார் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளது. இங்கு நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கையுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் ஆடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகியோருக்கு இந்தத் தொடரே கடைசி ஆஸ்திரேலியத் தொடராக இருக்கக் கூடும் என்பதால் மூத்த வீரர்கள் தங்களது கடைசி ஆஸ்திரேலியத் தொடரை சிறப்பானதாக மாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் இளம் வீரர்களும் கலக்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரால் முன்பு போல டெஸ்ட் போட்டிகளில்
அசத்த முடியுமா என்ற சந்ேதகதத்தை சிலர் எழுப்பியுள்ளனர்.
இதற்கு மெல்போர்ன் நகரில் போய் இறங்கியதுமே பதில் அளித்துள்ளார் சச்சின். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெஸ்ட் போட்டிகளில் வயது ஒரு தடை இல்லை. திறமைதான் முக்கியம். எனக்கு அந்த வயதும், திறமையும் இருப்பதாக கருதுகிறேன்.
நாங்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் நோக்கில்தான் வந்துள்ளோம். வெற்றியும் பெறுவோம் என நம்புகிறேன். கடந்த காலங்களில் நடந்த சாதனைகளை இப்போது நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்கொள்ளவுள்ள தொடரை சிறப்பாக ஆடும் கவனத்தில்தான் இருக்கிறோம் என்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் லிஜென்ட் டான் பிராட்மேன் வாயால் சிறந்த வீரர் என்று புகழப் பட்டவர் சச்சின். எனவே சச்சினின் ஆட்டத்தைப் பார்க்க ஆஸ்திரேலிய ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
சச்சினைப் போலவே கங்குலி, டிராவிட் ஆகியோரின் ஆட்டமும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. சமீபத்தில் முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலி சிறப்பாக ஆடினார். ஒரு நாள் தொடரில் சச்சின் சிறப்பாக ஆடினார். ஆனால் முன்னாள் கேப்டன் டிராவிட் மட்டுமே இரு தொடர்களிலும் சரியாக ஆடாத மூத்த வீரர்.
எனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் டிராவிட் எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது.
மூத்த வீரர்களின் நிலைமை இப்படி இருக்க இளம் வீரர்களான டோணி, யுவராஜ் சிங் உள்ளிட்டோரும் தங்களது திறமைகளை நிரூபிக்க தயாராக உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க இந்திய வீரர்கள் தயார் என துணை கேப்டன் டோணி கூறியுள்ளார்.
மொத்தத்தில் இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம், ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்ப்பத போல சாதாரணமாக இருக்காது, சில பல சாதனைகளுக்கு இந்தியர்கள் முயற்சிக்கக் கூடும் என்று தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications