கிரிக்கெட் தரவரிசை-மீண்டும் 'டாப்-10'ல் சச்சின்
டெல்லி: ஒரு நாள் வீரர்களுக்கான ஐசிசி தரவரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மீண்டும் டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை முத்தரப்பு தொடரின் பைனலில் சதம் அடித்து அணிக்கு வெற்றி கோப்பை பெற்று தந்ததை அடுத்து அவர் இந்த முன்னேற்றம் கண்டுள்ளார்.
அவர் 737 புள்ளிகள் பெற்று 5 இடங்கள் முன்னேறி தற்போது 7வது இடத்துக்கு வந்துள்ளார். சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் அவர் மீண்டும் டாப்-10 பட்டியலுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இரண்டு இடங்களிலும் இந்தியர்களே இடம்பிடித்துள்ளனர். 825 புள்ளிகளுடன் முதலிடத்தை கேப்டன் டோணியும், 778 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை யுவராஜூம் கைப்பற்றியுள்ளனர்.
காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்காத ஷேவாக், கம்பீர் தலா 2 இடங்கள் பின்தங்கியுள்ளனர். தற்போது ஷேவாக் 9வது, கம்பீர் 19வது இடத்தில் இருக்கின்றனர்.
இந்தியா 2வது இடம்...
அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.


Click it and Unblock the Notifications