
ஸ்லோ ஸ்டார்ட்
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில், லெவிஸ் வெறும் 6 ரன்களில் 6 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். இதன் பிறகு நம்பிக்கை அளித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால், 23 பந்துகளில் 36 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். மறுபக்கம் ஒன் டவுன் வீரராக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மிக நிதானமாக விளையாடினார். ஏனெனில், இந்த போட்டியின் வெற்றி அவர்களுக்கு மிக மிக முக்கியமானது. அதேசமயம், ஹைதராபாத் ஏற்கனவே லீக்கில் இருந்து வெளியேறிவிட்டதால், எந்தவித கவலையும் இன்று ஃப்ரீயாக விளையாடினார்கள்.

ஒரே ஓவரில் 20
பிறகு லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், நங்கூரம் பாய்ச்சி விளையாடிய சாம்சன், 15 ஓவர்களுக்கு பிறகு தனது கியரை மாற்ற ஆரம்பித்தார். அதன்பிறகு, சாம்சன் 41 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுபக்கம் லோம்ரோர் சிறப்பாக கம்பெனி கொடுத்தார். சித்தார்த் கவுல் வீசிய 16வது ஓவரில், 20 ரன்களை விளாசினார் சாம்சன். ஹைதராபாத் அணியின் எந்த பவுலர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்த ராஜஸ்தான், கடைசி 10 ஓவர்களில் ஓரளவு டீசண்ட்டாக விளையாடி164 ரன்கள் எடுத்தது.

ஒரே மேட்சில் மாஸ்
இதையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியில், கடந்த சில போட்டிகளாக சொதப்பி வந்த டேவிட் வார்னர் அணியில் இருந்து நீக்கப்பட, அவருக்கு பதில் ஜேஸன் ராய் களமிறக்கப்பட்டார். தொடக்கம் முதலே ராஜஸ்தான் பவுலர்களை விளாசிய ஜேஸன் ராய் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரது அபார அதிரடியில், 11 ஓவர்களுக்கே, ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை குவித்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தனை நாட்கள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார்ந்திருந்த ஜேஸன், இன்று ஒரே போட்டியில் தனது ஆளுமையை நிரூபித்துவிட்டார். அதிரடியாக விளையாடிய ஜேஸன், 42 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

எஸ்ஆர்ஹெச் வெற்றி
இதன் பிறகு களமிறங்கிய இளம் வீரர் ப்ரீயம் கர்க், முஸ்தபிசூர் ஓவரில், தனது முதல் பந்திலேயே கேட்ச்சாகி வெளியேறினார். அப்போது ஹைதராபாத் 13 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. 11 - 13 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை ஹைதராபாத் இழந்தது. எனினும், கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். 18.3வது ஓவரில் 167 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். இதன் மூலம், அந்த அணி ஐபிஎல் 2021 தொடரில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

6வது இடம்
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியின் தோல்வி பெரும் சறுக்கலாக அமைந்துள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன், 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி, இவர்களுக்கு கீழே உள்ளது. அதேசமயம், தொடரைவிட்டு ஏற்கனவே வெளியேறிவிட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தாலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











