டி20 உலகக்கோப்பையில் ஒழுங்கீனமான செயல்.. சென்னையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட UAE வீரர்
சென்னை: 2026 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக அணிக்கு (யுஏஇ) ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஜுஹைப் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை அணியிலிருந்து நீக்கி உடனடியாக வீட்டுக்கு அனுப்ப அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாகவே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒழுங்கீன நடவடிக்கை
பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான தகவலின்படி, முகமது ஜுஹைப் அணியின் விதிகளை மீறி ஒழுங்கீனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அமீரக கிரிக்கெட் வாரியம் அவரை உலகக்கோப்பை அணியிலிருந்து விடுவித்துள்ளது. அவர் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் என்ன தவறு செய்தார் என்பது பற்றி குறிப்பிடவில்லை.
22 வயதான முகமது ஜுஹைப், கடந்த மே 2025 இல் அறிமுகமானார். இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 303 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 20.20 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 103 ஆகவும் உள்ளது. பெரிதாக ஃபார்மில் இல்லாத வீரர் என்றாலும், உலகக்கோப்பைத் தொடரின் நடுவே ஒரு வீரர் நீக்கப்படுவது அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வீரர் யார்?
ஜுஹைப் வெளியேறியதால், அவருக்குப் பதிலாக 21 வயதான இளம் வீரர் ஆர்யன்ஷ் சர்மா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இவர் கேப்டனுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீரர் நீக்கம் குறித்துக் கவலைப்படாமல், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குத் தயாராக இருப்பதாக அமீரக கேப்டன் முகமது வாசிம் தெரிவித்துள்ளார். "எங்கள் திட்டம் மிகவும் எளிமையானது. ஏற்கனவே 2022ஆம் ஆண்டு நாங்கள் நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளோம். ஆனால் இம்முறை மைதானம் மற்றும் சூழல் வேறு. அதற்கேற்ப புதிய திட்டங்களை வகுத்துள்ளோம். ஒரு சாம்பியன் அணியாக எங்களைத் தயார் செய்துள்ளோம். இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் அணியில் இருப்பது எங்களுக்குப் பலம்" என்று அவர் கூறினார்.
சென்னையில் சவால்
இன்று நடைபெறும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்குள்ள செம்மண் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். நியூசிலாந்து போன்ற பலமான அணிக்கு எதிராக, இந்த ஆடுகளத்தில் விளையாடுவது அமீரக அணிக்குப் பெரும் சவாலாக இருக்கும். நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications