ரிஷப் பண்ட் -ன் அதிரடி வீணா??.. 2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா.. இங்கி-க்கு அடித்த அதிர்ஷ்டம்!
பெர்மிங்கம்: இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கலக்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சொதப்பியுள்ளது.
இரு அணிகளும் மோதி வரும் 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம் நகரத்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்த போதும், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடித்த அட்டகாச சதம் மூலம் இந்திய அணி மீண்டது. இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் வேகத்தில் சரிந்தது. அந்த அணியில் பேர்ஸ்டோ தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்ப, 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது.

இந்திய அணி சொதப்பல்
இதன் மூலம் 132 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய இந்திய அணிக்கு 2வது இன்னிங்ஸில் கண்டம் தான் காத்திருந்தது. சுப்மன் கில் (4), ஹனுமா விஹாரி (11) என மீண்டும் சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

புஜராவின் ஆட்டம்
இந்திய அணி தடுமாறிய போது, ரிஷப் பண்ட் - சட்டீஸ்வர் புஜாரா ஜோடி காப்பாற்றினர். நிதானமாக ஆடிய புஜாரா 168 பந்துகளில் 66 ரன்களை எடுத்து அவுட்டானார். அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 86 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என நினைத்த போது ஏமாற்றமே மிஞ்சியது.

கடினமான இலக்கு
இதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. ஏற்கனவே 132 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு இன்னும் ஒன்றரை நாள் மீதம் இருப்பதால் நிதானமாக விளையாடியாவது வெற்றி பெற முணைப்பு காட்டுகிறது.


Click it and Unblock the Notifications