"வைபவ் சூர்யவன்ஷி பெஞ்ச்சில் உட்கார்ந்துதான் ஆகணும்.. ஏனென்றால்..".. கம்பீர் பிளானை சொன்ன அஸ்வின்
சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டம் ஆடினார். இஷான் கிஷன் அணிக்குத் திரும்பும்போது இந்த இளம் வீரரை எப்படி நீக்க முடியும் என்ற விவாதம் கிளம்பியுள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வெளிப்படையான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
வெலிங்டனில் நடந்த 3-வது டி20 போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வெறும் 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்து பிரம்மாண்ட கூட்டணி அமைத்தார். இதனால் நியூசிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்திய அணி கிட்டத்தட்ட 7 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே எளிதாக எட்டிப் பிடித்தது. இந்த அபார வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள விவாதம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின், "நாம் தான் தேவையில்லாமல் குழப்பத்தை உருவாக்குகிறோம். கள நிலவரம் மிகத் தெளிவாக உள்ளது. அணியில் உள்ள அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் முதல் சாய்ஸ் கிடையாது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தான் இந்தியாவின் நிரந்தர தொடக்க ஜோடியாக இருப்பார்கள்" என்றார்.
மேலும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அணுகுமுறையைப் பாராட்டிய அவர், "இஷான் கிஷன் இல்லாத இந்த ஒரு போட்டிக்காக சஞ்சு சாம்சனை 3-வது இடத்தில் இறக்கி, வைபவை தொடக்க வீரராகப் பயன்படுத்திய கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் வியூகம் மிகச் சரியானது. சர்வதேச அனுபவம் உள்ள சாம்சன் 3-வது இடத்துக்குப் பொருத்தமானவர். ஆனால் இஷான் கிஷன் திரும்பும் வரை மட்டுமே இது தொடரும்" என்று குறிப்பிட்டார்.
4-வது டி20 போட்டியில் இஷான் கிஷன் முழு உடற்தகுதியுடன் களம் இறங்கினால், வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரையே கம்பீர் தொடக்க ஆட்டக்காரர்களாக தொடர்ந்து ஆதரிப்பார் என அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications


