ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக பயணம் செய்த இந்திய வீரர்களுடன், நட்சத்திர வீரர் விராட் கோலி பயணிக்காதது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின், இந்திய வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. பேட்டிங் வரிசையில் செய்யும் மாற்றங்கள், இஷான் கிஷனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஆட்டம் என்று ரசிகர்களின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் பலரும் பார்படாஸில் இருந்து ட்ரினிடாட் மைதானம் வந்தனர். ஆனால் இந்திய வீரர்களுடன் நட்சத்திர வீரர் விராட் கோலி பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ட்ரினிடாட்டில் இந்திய அணியினரை வரவேற்ற டுவைன் பிராவோ வெளியிட்ட வீடியோவிலும் இந்திய வீரர் விராட் கோலி இல்லை. ரோகித் சர்மா முதல் உம்ரான் மாலிக் வரை அனைத்து வீரர்கள் இருந்த நிலையில், விராட் கோலி மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதன் காரணமாக மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி பெஞ்ச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்க உள்ளதாகவும், அக்சர் படேல் மட்டும் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சஞ்சு சாம்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
3வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தால், உலகக்கோப்பைக்கு கூட தகுதிபெறாத அணியிடம் தொடரை இழந்த இந்திய அணி என்ற அவப்பெயர் ஏற்படும் என்பதால் ரோகித் சர்மாவை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விராட் கோலியை பெஞ்ச் செய்வதற்கான முடிவை எடுத்த காரணத்தினால் தான் சக வீரர்களுடன் விராட் கோலி பயணம் மேற்கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.