டெல்லி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசினார். 84 பந்துகளை எதிர் கொண்ட அவர் 131 ரன்கள் விளாசினார்.இதில் 16 பவுண்டர்களும் 5 சிக்சர்களும் அடங்கும்.
இதன் மூலம் இந்திய அணி 35 ஓவர்களில் 273 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றார்.

மேலும் உலக கோப்பையில் அதிவேகமாக 65 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் ரோகித் சர்மா படைத்தார். ஆனால் ரோகித் சர்மாவின் இந்த சாதனையை விராட் கோலி ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி ரசிகர்கள் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட மாட்டார் என்றும் ஆனால் சிறிய அணிகள் ஏதேனும் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு எதிராக ரன்களை அடித்து விட்டு தான் பெரிய ஒரு வீரர் போல் காட்டிக் கொள்வார் என்றும் சாடி இருக்கிறார்கள்.
மொக்கையான ஒரு அணி வந்தால் அவர்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டு பெரிய பேட்ஸ்மேன் என பெயரை ரோகித் சர்மா பெற்றுவிடுவார் என்றும் ஆனால் விராட் கோலி பெரிய அணிகளுக்கு எதிராகவும் நெருக்கடியான கட்டத்திலும் நன்றாக விளையாடுவார் என்றும் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சிலர் ரோகித் சர்மா இதுபோன்ற கத்து குட்டி அணிகளுக்கு எதிராக தான் பல சாதனைகளை படைத்திருப்பதாகவும் பெரிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து ரோகித் சர்மா சொதப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறார்கள்.

ரோகித் சர்மா இது போல் ஏதேனும் ஒரு சின்ன அணி எதிராக பெரிய இன்னிங்ஸ் ஆடிவிட்டு அடுத்த சில போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து விடுவார் என்று விமர்சித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்ததன் மூலம் இன்னும் சில போட்டிகளில் ரோஹித் சர்மாவிடமிருந்து தாம் ரன்களை எதிர்பார்க்க முடியாத என்றும் விராட் கோலி ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். மேலும் கத்துக் குட்டி என்ற வார்த்தையை வைத்து சமூக வலைத்தளத்தில் ரோகித் சர்மாவுக்கு எதிராக கோலி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்திய வீரர் ஒருவர் சதம் அடித்ததற்கு இந்திய ரசிகர்களே அவரை கிண்டல் செய்யும் அளவுக்கு கிரிக்கெட் தற்போது மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.