"சச்சினுக்கு டிராவிட், கங்குலி இருந்தாங்க ஆனா எங்க பாபருக்கு..".. வக்கார் யூனிஸ் விசித்திர ஒப்பீடு
மும்பை: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக தொடர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வக்கார் யூனிஸ், தற்போதைய பாகிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார்கள் பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி மட்டுமே எனக் குறிப்பிட்டார். மேலும் பாபர் அசாமை ஆதரித்துப் பேசிய அவர், "பாபர் அசாமுக்கு மறுமுனையில் நின்று ஆட தரமான பேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். சச்சின் டெண்டுல்கர் ஆடிய காலத்தில் அவருக்கு ஆரம்பத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கரும், பின்னர் ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் வீரேந்தர் சேவாக் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களின் பலம் இருந்தது. ஆனால் பாபருக்கு அப்படி துணை நிற்க அணியில் 4 பெரிய வீரர்கள் கூட இல்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "1990களில் எங்கள் பாகிஸ்தான் அணியில் முதல் 6 இடங்களில் 6 மேட்ச் வின்னர்கள் இருந்தனர். எதிரணிகளை மிரட்டினோம். ஆனால் இப்போது பாபர் அசாம் என்ற ஒற்றை வீரர் மட்டுமே இருக்கிறார். அவருக்கும் சரியான ஆதரவு கிடைத்திருந்தால் இந்நேரம் சச்சினுக்கு இணையாக உயர்ந்திருப்பார்" என்று வக்கார் யூனிஸ் தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. ஆனாலும் பாபர் அசாமின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. இந்த தொடரில் 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவரது பேட்டிங் சராசரி 29.50 ஆக சரிந்துள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் பாகிஸ்தான் 110 ரன்களுக்கு சுருண்ட போது, பாபர் எடுத்த 29 ரன்களே அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கடந்த 5 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

