மும்பை: மும்பைக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய புனே வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் 16 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பத்தாவது ஐபிஎல் சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று ப்ளே-ஆப் சுற்று போட்டி தொடங்கியுள்ளது. இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு சிம்மன்ஸ், பார்தீவ் பட்டேல் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கினர். சிம்மன்ஸ் 5 ரன்னில் நடையை கட்டினார்.
வாஷி்ங்டன் சுந்தரின் அசத்தல் பவுலிங்கில் சிக்கிய ரோகித் சர்மா 1, அம்பத்தி ராயுடு 0, பொல்லார்டு 7 ரன்களுடன் வெளியேறினார்கள். 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார் வாஷிங்டன் சுந்தர். இது ஐபிஎல் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சாகவும், இந்த ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் ஆட்டநாயகன் ஆன முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.