ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான சார்மினாரை பார்க்க முடியவில்லை என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தவில்லை என்பதால் வரலாற்றை மாற்ற அந்த அணியின் தீவிரமாக உள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 7 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் வீரர்கள் அகமதாபாத் வந்தனர். அதற்கு முன்பாக ஐதராபாத்தில் காணொளி வாயிலாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முகமது ரிஸ்வானை பார்த்து ஐதராபாத்தில் சார்மினாரை பார்க்க சென்றீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முகமது ரிஸ்வான், பாகிஸ்தான் வீரர்களுக்கு சார்மினாரை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் அனைவருமே நிஜாம் மஹாலை கண்டோம் என்று பதில் அளித்தார். ஐதராபாத்தில் தரையிறங்கியது முதலே பாகிஸ்தான் வீரர்கள் பலரும் பிரியாணியை வெளுத்து கட்டி வந்தனர்.
முகமது ரிஸ்வான் ஒரு பேட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பிரியாணியை தினமும் சாப்பிடுவதால் எங்காளின் ட்ரெய்னரே பயந்துவிட்டார் என்று கூறினார். அதேபோல் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐதராபாத் மக்கள் அனைவரும் அன்பை பொழிந்தனர். ஐதராபாத் மைதானத்தில் 2 பயிற்சி போட்டிகள் மற்றும் 2 உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடியது.
பயிற்சி போட்டிகளில் தோல்வியடைந்தாலும், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கில்லியாக செயல்பட்டுள்ளது. நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை பாகிஸ்தான் அணி எளிதாக வென்றது. இரு போட்டிகளிலும் முகமது ரிஸ்வானின் ஆட்டம் இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.