பார்படாஸ்: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படாஸ் ராயல் அணிக்காக ஆடிய கார்ன்வால் 48 பந்துகளில் 12 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 102 ரன்கள் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
143 கிலோ எடை, 6.5 அடி உயரம் என்று பார்ப்பதற்கு மலை போல் இருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ரஹீம் கார்ன்வால். ஸ்பின்னர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேனான இவர், வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றவர். இதன் காரணமாக ஃபிட்னஸ் பிரச்சனை இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அண்மையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட கார்ன்வால் சேர்க்கப்பட்டார். இவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்த்ல் செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து பார்படாஸ் ராயல்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் ஃபிளட்சர் 56 ரன்களும், வில் சமீத் 36 பந்துகளில் 63 ரன்களும், கேப்டன் ஷர்ஃபானே ரூதர்ஃபோர்ட் 27 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இதையடுத்து களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் கைல் மேயர்ஸ் - கார்ன்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கைல் மேயர்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஆட்டத்தின் கட்டுப்பாட்டை மொத்தமாக கார்ன்வால் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசிய அவர், 48 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
மொத்தமாக 12 சிக்சர், 4 பவுண்டரி என்று விளாசிய கார்ன்வாலின் ஆட்டம் பலரையும் பிரமிக்க செய்துள்ளது. சதம் விளாசிய பின் "Bat Drop" வகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் சதம் காரணமாக பார்படாஸ் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. கார்ன்வாலின் அதிரடியான ஆட்டம் இந்திய ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.