
லீக் போட்டி
நேற்று முன்தினம் நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் ருதுராஜ் சதமடித்தார். அதேபோல இறுதியில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 32 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் அணியில் ராகுல் தேவேத்தியா 3 விக்கெட்களை எடுத்தார். அதன் பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 190 ரன்களை குவித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் அனைவரும் சென்னை பவுலிங்கை புரட்டிப் போட்டனர். இறுதியில் ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 5 வெற்றிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வெறும் 21 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 6 பவுண்டரிக்களும் 3 சிக்சர்களும் அடக்கம். மிகப் பெரிய ஸ்கோரை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் வெளியேறினார். ராஜஸ்தான் அணியின் வெற்றியில் இவரது பங்கு முக்கியமானது. இந்த போட்டியில் மட்டுமின்றி, கடந்த சில போட்டிகளாகவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ந்து சீரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

வைரல் போட்டோ
இந்தப் போட்டிக்குப் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் தல தோனியை சந்தித்து ஆலோசனை பெற்றார். மேலும், அவரிடம் ஆட்டோகிராப்பும் வாங்கினார். 19 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இது தொடர்பான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டரில், "லேஜன்டரி கிரிக்கெட் வீரர் தோனி சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. அவர் எப்போதுமே நமக்கு ஒரு உத்வேகம் தான்!" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ருதுராஜின் அதிரடி ஆட்டம் பிட்ச் கொடுத்த ஒரு ஐடியாவை தனக்கு அளித்ததாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

சிறப்பான தொடக்கம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் முதலில் பிட்ச் எப்படி இருக்கும் என யோசித்துக்கொண்டிருந்தேன், ஆனால் 190 ரன்கள் வரை சேஸ் செய்தோம். பிட்ச் நன்றாகவே இருந்தது. மோசமான பந்துகளை மட்டுமே நான் குறி பவுண்டரிக்கு விரட்டினேன். எங்கள் அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்ததன் மூலம் 190 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடைய முடிந்தது" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











