மும்பை: உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மும்பை வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தபோது, அவரை வரவேற்க கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அங்கு வந்தார். இரு ஜாம்பவான்களும் சந்தித்துக்கொண்ட அந்தத் தருணம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
'GOAT India Tour' பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று (டிசம்பர் 14) மும்பை வந்தார். வான்கடே மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில், மெஸ்ஸியுடன் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை, "மும்பையின் மைந்தன்" சச்சின் டெண்டுல்கர் மேடையில் வரவேற்றார். 2011-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றபோது அணிந்திருந்த ஜெர்சியை சச்சின் மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். பதிலுக்கு மெஸ்ஸி, ஒரு சிறப்பு உலகக் கோப்பை கால்பந்தை சச்சினுக்குப் பரிசாக அளித்தார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிப் பரிமாறிக் கொண்ட அந்தத் தருணம் மறக்க முடியாத தருணமாக ஆக மாறியது.
மெஸ்ஸி குறித்துப் பேசிய சச்சின், "மும்பை கனவுகளின் நகரம். பல கனவுகள் இந்த மைதானத்தில் நிறைவேறியுள்ளன. 2011-ல் நாங்கள் உலகக் கோப்பையை வென்றது போல, இன்று மெஸ்ஸி இங்கு வந்திருப்பது மும்பைக்கு ஒரு பொற்காலம். அவர் எல்லாவற்றையும் சாதித்துவிட்டார். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது பணிவு (Humility) எங்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது," என்று புகழ்ந்து தள்ளினார்.
சுனில் சேத்ரி சந்திப்பு
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியும் மெஸ்ஸியைச் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கியபோது, "GOAT meets GOAT" என்று ரசிகர்கள் கொண்டாடினர். மெஸ்ஸி கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்சியை சேத்ரிக்கு பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, கூட்டத்தில் இருந்த சிலர் எதிர்ப்புக் குரல் (Booing) எழுப்பினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர், "கணபதி பாப்பா மோரியா" என்று முழக்கமிட்டு ரசிகர்களைத் தன் பக்கம் திருப்பினார்.
நடிகர் டைகர் ஷெராஃப், இயக்குனர் ரோஹித் ஷெட்டி (சிங்கம்) ஆகியோரும் மெஸ்ஸியைச் சந்தித்தனர். மெஸ்ஸி மைதானத்தில் குழந்தைகளுடன் பந்து விளையாடியும், பெனால்டி ஷூட்-அவுட் செய்தும் ரசிகர்களை மகிழ்வித்தார். மும்பை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றதால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.