"140 கோடி இந்தியர்களையும் தலைநிமிரச் செய்தீர்கள்".. ஆசிய விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் குவித்த பதக்கங்கள் வெறும் எண்கள் மட்டுமே கிடையாது; சர்வதேச அரங்கில் புத்தம் புதிய இந்தியா விஸ்வரூபம் எடுப்பதன் அடையாளம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தியே தீருவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.
டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாடினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட பல விளையாட்டுக்களை சேர்ந்த சாம்பியன்கள் இதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அப்போது வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த பதக்கங்கள் வெறும் எண்கள் மட்டுமே அல்ல. விளையாட்டுத் துறையில் அசுர வேகத்தில் முன்னேறி வரும் புதிய இந்தியாவின் வலிமையான அடையாளம். நீங்கள் 140 கோடி இந்தியர்களையும் தலைநிமிரச் செய்துள்ளீர்கள். நமது மூவர்ணக் கொடியை உலக அரங்கில் உயரப் பறக்க விட்டதே உங்கள் ஆகப்பெரிய சாதனை. எனவே, இந்த வெற்றி உங்களுக்கு மட்டுமே உரியது அல்ல; கோடிக்கணக்கான நமது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
2036 ஒலிம்பிக் இலக்கு
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் தகுதியை இந்தியா மிக வேகமாக வளர்த்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "சர்வதேச விளையாட்டுத் திருவிழாக்களை வெற்றிகரமாக நடத்தும் விருந்தோம்பல் மிக்க, நம்பகமான நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்காக நாங்கள் தீவிரமாக விண்ணப்பித்து வருகிறோம். அந்த ஒலிம்பிக் போட்டியை நமது மண்ணில் நடத்தியே தீருவோம் என்பதே நமது அசைக்க முடியாத சபதம்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
பெண்களின் அபார ஆதிக்கம்
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 21 தங்கம் உட்பட மொத்தம் 85 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. முந்தைய தொடரின் எண்ணிக்கையை விட இது சற்று குறைவு என்றாலும், முதல் முறையாகக் களம் கண்ட இளம் வீரர்கள் மட்டுமே 41 பதக்கங்களை வென்று நம்பிக்கையளித்துள்ளனர்.
குறிப்பாக இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பை பிரதமர் மோடி தனித்து பாராட்டினார். "நமது மகளிர் வீராங்கனைகளுக்கு எனது சிறப்பு வாழ்த்துகள். அவர்கள் மட்டுமே 11 தங்கம் உட்பட 38 பதக்கங்களை நாட்டுக்கு வாரி வழங்கியுள்ளனர்" என்றார். தங்கம் வென்ற கிரிக்கெட் அணிகள், ஹாக்கி அணிகள் மற்றும் 5 தங்கம் வென்ற வில்வித்தை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். குறிப்பாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 44 ஆண்டு கால நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சாதனையை அவர் பாராட்டினார்.
12 ஆண்டு கால உழைப்பு
நாட்டின் விளையாட்டு கட்டமைப்பு குறித்து பேசிய மோடி, "எந்தவொரு இலக்கும் கனவும் ஒரே நாளில் நனவாகி விடாது. அதற்கு பல ஆண்டுகால அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் தேவை. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா மிகுந்த பொறுமையுடன் செயல்பட்டு, விளையாட்டிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
ஒரு காலத்தில் சர்வதேச போட்டிகளில் இந்தியா சொற்ப பதக்கங்களை மட்டுமே வெல்லும் சூழல் இருந்தது. பல விளையாட்டுகள் பற்றி மக்களுக்குத் தெரியாமலேயே போனது. அந்த அவநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் உறுதி பூண்டோம். தற்போது விளையாட்டுத் துறையில் மிகவும் வெளிப்படையான தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. அதன் பயனாகவே சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலும் கொடியும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது" என்றார்.
வீரர்கள் அளித்த நினைவுப் பரிசுகள்
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது, வீரர்கள் பிரதமருக்கு தங்களின் வெற்றிக் கருவிகளை நினைவுப் பரிசுகளாக வழங்கினர். தனிநபர் மற்றும் மகளிர் அணி பிரிவில் 2 தங்கம், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 வெள்ளி வென்று மிரட்டிய 17 வயது இளம் வில்வித்தை வீராங்கனை கும்கும் மோஹோத், தான் பயன்படுத்திய வில்லினை பிரதமருக்குப் பரிசளித்தார்.
பெங்களூருவில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆடவுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் அணியினரும், ராய்ப்பூரில் ஜிம்பாப்வேக்கு எதிராக களம் காணவுள்ள மகளிர் கிரிக்கெட் அணியினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மகளிர் அணிக்குத் தலைமை தாங்கி தங்கம் வென்று கொடுத்த ஹர்மன்பிரீத் கவுர், அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பிரதமருக்கு வழங்கினார். அவருக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்மிருதி மந்தனாவும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேபோல, இளம் கோல்ஃப் வீராங்கனை பிரணவி உர்ஸ், தான் பயன்படுத்திய கையுறை மற்றும் கண்ணாடிப் பேழையில் பதிக்கப்பட்ட கோல்ஃப் பந்தை பிரதமரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா உள்ளிட்ட முக்கிய விளையாட்டு அமைப்புகளின் உயர் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். உலக அரங்கில் இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தச் சந்திப்பு அமைந்தது.


Click it and Unblock the Notifications

