ஐபிஎல்-மும்பையின் புயல் வேகப் பந்து வீச்சில் 95 ரன்களில் சுருண்டது டெல்லி

ஐபிஎல் தொடரில் இன்று முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று சந்தித்தன.
டெல்லியில் போட்டி நடைபெறுவதாலும், வீரேந்திர ஷேவாக் இருப்பதாலும் பெரிய அளவில் டெல்லி ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் புயல் வேகப் பந்து வீச்சில் சிக்கி டெல்லி தவிடு பொடியாகி விட்டது.
முதலில் அதிரடி வீரர் டேவிட் வார்னரை ஒரு ரன்னில் அவுட்டாக்கினார் மலிங்கா. மறு முனையில் 16 ரன்களுடன் இருந்த ஷேவாக்கை ரன் அவுட் செய்தார் சச்சின் டெண்டுல்கர். இதனால் அணி பெரும் தடுமாற்றத்திற்குள்ளானது.
தடுமாற்றத்தில் தத்தளித்த அணியை நிமிர்த்தும் முயற்சியில் வேணுகோபால ராவும், நமன் ஓஜாவும் தீவிரமாக முயற்சித்தனர். ராவ் 26 ரன்களும், ஓஜா 29 ரன்களும் எடுத்தனர்.
மலிங்கா ஒருபக்கம் பயமுறுத்த மறுபக்கம் ஹர்பஜன் சிங் தன் பங்குக்கு சூறாவளியில் குதிக்க தடுமாறிப் போன டெல்லி அணி 17.4 ஓவர்களிலேயே 95 ரன்களுக்கு அத்தனை விக்கெட்களையும் பறி கொடுத்து விட்டது.
மலிங்கா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினார். முர்தஸாவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
மும்பையில் புனேவுடன் பஞ்சாப் மோதல்
இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கும் 2வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் மோதவுள்ளன. இப்போட்டி மும்பையில் நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications