தங்கம் வென்ற சீத்தல் தேவி, தோமன் குமார் கூட்டணி.. ஆசிய பாரா வில்வித்தையில் இந்தோனேசியாவை வீழ்த்தினர்
நகோயா: 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வில்வித்தையில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் சீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் ஜோடி, இந்தோனேசியாவை 151-148 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இதன் மூலம் நடப்பு ஆசிய பாரா தொடரில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
உச்சக்கட்ட பரபரப்புடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய ஜோடி மிகத் துல்லியமாகக் குறிபார்த்து அம்புகளை எய்தது. முதல் சுற்றில் 38-37 என முன்னிலை பெற்ற இந்திய இணை, 2-வது சுற்றில் 39 புள்ளிகள் குவித்து 77-73 என முன்னிலையை அதிகரித்தது. 3-வது சுற்றில் 36 புள்ளிகள் பெற்று சற்று சறுக்கினாலும், கடைசி சுற்றில் சுதாரித்துக் கொண்டு 38 புள்ளிகளைச் சேர்த்து 151-148 என்ற கணக்கில் தங்கத்தை உறுதி செய்தது. அரையிறுதியில் சீன தைபே அணியை 142-141 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், இந்தத் தொடரின் தரவரிசைச் சுற்றிலேயே இந்த ஜோடி அசாத்திய உலக சாதனை படைத்தது. சீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் இருவரும் இணைந்து மொத்தம் 1,402 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்பு சீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஜோடி படைத்திருந்த 1,400 புள்ளிகள் உலக சாதனையை இவர்கள் தகர்த்தெறிந்தனர். அத்துடன் தனிநபர் தகுதிச் சுற்றில் சீத்தல் தேவி 720-க்கு 704 புள்ளிகள் குவித்து உலக சாதனையைச் சமன் செய்தார்.
இரு கைகளும் இல்லாத நிலையிலும், தனது கால்களையும் தாடையையும் பயன்படுத்தி வில்வித்தையில் சர்வதேச அளவில் அசுர சாதனை படைத்து வருகிறார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 19 வயதான சீத்தல் தேவி. பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், தற்போது உலக சாம்பியனான தோமன் குமாருடன் இணைந்து இந்தியாவுக்கு மற்றுமொரு தங்கத்தை ஈட்டித் தந்துள்ளார். இவர்களின் இந்த அசாத்திய சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications


