கேப்டவுன்: ஆர்.பி சிங் பந்துவீச்சில் மிரட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்-2 டுவென்டி-20 போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமான வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் லீக் சுற்றுப்போட்டியில் ஷேவாக்கின் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, யுவராஜ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்டது.போட்டிக்கு முன்பாக மழை பெய்ததால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷேவாக் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக வந்த போபரா 22, கோயல் 38 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தனர். யுவராஜ் 16 ரன்களுக்கு அவுட்டானார்.அடுத்து வந்த சங்ககரா 8, ஜெயவர்தனா 6 ரன்களுக்கு வெளியேறினர். பஞ்சாப் அணி 12 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது.இந்நிலையில் மீண்டும் மழை வந்ததால் டெல்லி அணிக்கு 6 ஓவரில் 54 ரன்கள் எடுத்தால் வெற்றி என டக்வொர்த் லீவிஸ் முறைப்படி புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் பந்துவீச்சை ஷேவாக் விளாசி தள்ளினார். அவர் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 16 பந்தில் 38 ரன்களுடனும், கம்பீர் 15 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.டெல்லி அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.டெக்கான் அணி அசத்தல்...மற்றொரு போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு டெக்கான் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் துவக்கத்திலே அதிர்ச்சி கொடுத்தார். இவரது பந்துவீச்சில் கேப்டன் மெக்கலம் 1, கெய்ல் 10 ரன்களுக்கு அவுட்டானார்கள்.அடுத்த வந்த கங்குலியும் (1) கைகொடுக்கவில்லை. ஹாட்ஜ் மட்டும் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆர்பி சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், கிப்ஸ் துவக்க வீரர்களாக வந்தனர். கில்கிறிஸ்ட் 11 ரன்களுக்கு அவுட்டானார். மூன்றாவது வீரராக வந்த லட்சுமண் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.சூப்பராக விளையாடிய கிப்ஸ் 26 பந்தில் 43, ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றனர். டெக்கான் சார்ஜர்ஸ் 13.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடந்த முறை லட்சுமணன் தலைமையில் விளையாடிய டெக்கான் அணி மிகவும் மோசமாக விளையாடி கடைசி இடம் பிடித்தது. தற்போது புதிய கேப்டன் கில்கிறிஸ்ட் தலைமையில் முதல் போட்டியிலே சூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.