சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ள போகும் இன்னொரு அணி எது என்பது குறித்து இன்று தெரிந்துவிடும். அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருக்கும் குவாலிபயர் போட்டியில் குஜராத்தும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது.
இது குறித்து பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயில், இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என்று கூறி இருக்கிறார். குஜராத் அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள்.

இது நிச்சயமாக அவர்களுக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கும். அதையும் நாம் ஒரு அம்சமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் தற்போது மும்பை அணியிடமே உத்வேகம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஒருவேளை மும்பை அணி இறுதிப் போட்டிக்கு சென்று விட்டால் சிஎஸ்கேவுக்கு பிரச்சனை தான்.
ஏனென்றால் மும்பை போன்ற ஒரு அணியை சிஎஸ்கே இறுதிப்போட்டியில் சந்திக்க வேண்டும் என்று நினைக்காது என கெயில் கிண்டல் அடித்துள்ளார். கெயிலின் இந்த பேச்சிற்கு காரணம் இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை அணியிடம் தான் சிஎஸ்கே அதிக முறை தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக 2013, 2015,2019 ஆகிய தொடரில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி மூன்று முறை தோல்வியை தழுவி இருக்கிறது.
ரோகித் சர்மா வருவதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பையை சிஎஸ்கே இறுதி ஆட்டத்தில் ஒரு முறை மட்டும் தான் வீழ்த்தி இருக்கிறது. பைனலில் மும்பை கையே இதுவரை ஓங்கி இருந்ததால் சென்னை ரசிகர்களும் மும்பை அணி பைனலுக்கு வந்தால் சிஎஸ்கேக்கு சிக்கல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் இதுவரை மும்பை இந்தியன்ஸ் இடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக பைனலில் அவர்களை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.