மும்பை : 17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக வாகை சூடும் அணி யார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கில் வாஹன் கணித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. தோனியின் கடைசி சீசன் என்பதோடு, நடப்பு சாம்பியன் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் தான் இறுதிப்போட்டி நடக்கும். இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு சிஎஸ்கே முன்னேறினால், தோனியின் விருப்பப்படி சேப்பாக்கம் மைதானத்திலேயே அவரின் கடைசி ஐபிஎல் போட்டி இருக்கும்.

ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் மும்பை, கேகேஆர், லக்னோ, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் கூடுதல் பலத்துடன் களமிறங்கியுள்ளனர். அதிலும் மும்பை அணி கடந்த 3 சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. இதனால் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் மும்பை அணி ஒப்பந்தம் செய்தது.
அதுமட்டுமல்லாமல் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோகித் சர்மாவையே கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. அதேபோல் ஏலத்திலும் ஜெரால்ட் கோட்சியே, ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, மபாகா, துஷாரா, ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட வீரர்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் அதிக பலத்துடன் இருக்கும் சூழலில், தற்போது கூடுதல் பலம் பெற்றுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் மற்றும் ஸ்பின்னர்களிலும் பல்வேறு தரமான வீரர்களை ஒப்பந்தம் செய்து களமிறங்கவுள்ளது. இதனால் மும்பை vs சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வெல்ல போகும் அணி எது என்ற கணிப்பை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கில் வாஹன் வெளியிட்டுள்ளார். அதில், ஐபிஎல் தொடருக்காக மும்பை வருவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். இந்த சீசனை மும்பை அணி நிச்சயம் வெல்லும் என்று கணித்துள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.