மும்பை: ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் விளையாடப்படும் 1000வது போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் ராஜஸ்தான் அணி ஜெய்ஷ்வால் மட்டும் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். எப்படி ஒரு இன்ஜின் மற்ற ரயில் பெட்டிகளை இழுத்து செல்லுமோ, ஜெய்ஷ்வால் தனி ஆளாக 62 பந்தில் 124 ரன்கள் சேர்த்தார்.

இதற்கு அடுத்த படியாக மும்பை இந்தியன்ஸ் கொடுத்த 25 எக்ஸ்டிரா தான் இருந்தது. அப்போது மற்ற வீரர்கள் எப்படி சொதப்பி இருப்பார்கள் என்று பார்த்து கொள்ளுங்கள். இதனால், ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் பர்த் டே பாய் ரோகித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 23 பந்தில் 28 ரன்கள் சேர்க்க, வழக்கஙம போல் கேமிரான் கிரீன் 26 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ், தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். 29 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். எனினும் முக்கிய கட்டத்தில் அவர் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இதனையடுத்து, திலக் வர்மா, டிம் டேவிட் ஜோடி சேர்ந்து பெரிய ஷாட்களை ஆடினர். இந்த ஜோடி 19வது ஓவரில் 15 ரன்களை கொடுக்க, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. இதில் டிம் டேவிட் ஹாட்டிரிக் சிக்சர்களை அடித்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் வான்கடே மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் வெற்றிக்கரமாக துரத்திய முதல் அணி என்ற சாதனை படைத்தது.