வெறியாட்டம் ஆடிய சுப்மன் கில்.. குஜராத் நிர்ணயித்த சாதனை இலக்கு.. பதிலடி கொடுப்பார்களா பல்தான்ஸ்?
அகமதாபாத்: குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணி வெற்றிபெற குஜராத் அணி தரப்பில் 234 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார்.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் திடீரென மழை பெய்ததால், ஆட்டம் 8 மணிக்கு தாமதமாக தொடங்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணி தரப்பில் சாஹா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 4 ஓவர்கள் நிதானம் காட்டிய சுப்மன் கில், அடுத்த ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினார்.

இதன் காரணமாக குஜராத் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சாஹா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் சேர்ந்தார். ஒருபக்கம் சாய் சுதர்சன் தேவைக்கேற்ப அதிரடியாக ஆட, இன்னொரு பக்கம் சுப்மன் சில் அதிரடி காட்டினார். இதனால் 32 பந்துகளில் சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றிய சுப்மன் கில், ஆகாஷ் மத்வால் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர்களை விளாசினார்.
தொடர்ந்து பியூஷ் சாவ்லா வீசிய ஓவரிலும் 20 ரன்கள் சேர்க்கப்பட, சுப்மன் கில் 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 32 பந்துகளில் அரைசதம் விளாசிய கில், அடுத்த 17 பந்துகளில் சதத்தை எட்டியுள்ளார். இவரின் அதிரடி ஆட்டம் காரணமாக குஜராத் அணி 16 ஓவர்களில் 183 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து 60 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து கில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா களம் புகுந்தார். தொடர்ந்து 18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது.
இதையடுத்து 19வது ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, திடீரென சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். இதனால் ரஷித் கான் களமிறக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் ரஷித் கான் ஒரு பவுண்டரியும், ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினர். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்துள்ளது. ஃபினிஷிங்கில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். அதேபோல் பிளே ஆப் போட்டிகளில் அதிக ரன்களை இலக்காக நிர்ணயித்து குஜராத் அணி சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications