ஹீரோவான அர்ஜுன் டெண்டுல்கர்.. மாஸ் காட்டிய கேமரூன் க்ரீன்.. ஐதராபாத்துக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை!
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மும்பை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப் மற்றும் மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணி தரப்பில் ஹாரி ப்ரூக் - மயங்க் அகர்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

கடந்த போட்டியில் சதம் விளாசிய ஹாரி ப்ரூக் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த த்ரிப்பாட்டி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் அணி நிதான ஆட்டத்தின் வெளிப்படுத்தியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் பின்னர் கேப்டன் மார்க்ரம் கியரை அதிரடிக்கு மாற்றினார். ஆனால் எதிர்பாராவிதமாக 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அபிஷேக் சர்மாவும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் - கிளாஸன் இணை சேர்ந்தது. நிதானமாக ஆடிய அந்த கூட்டணியால், ஐதராபாத் அணி 13 ஓவர்களில் 106 ரன்கள் சேர்த்தது. பின்னர் பியூஷ் சாவ்லா வீசிய 14வது ஓவரில் கிளாஸன் அதிரடியாக 20 ரன்கள் சேர்த்தார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் கிளாஸன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சிக்சர் அடிக்க முயன்று மயங்க் அகர்வாலும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்கோ யான்சன் 6 பந்துகளில் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் கடைசி 2 ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு, 24 ரன்கள் தேவைப்பட்டது. இம்பேக்ட் பிளேயராக வந்த அப்துல் சமத் - புவனேஷ்வர் குமார் இணை களத்தில் இருந்தது. 19வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச மும்பை அணி சார்பாக அர்ஜுன் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் அப்துல் சமத் ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, 5வது பந்தில் புவனேஷ்வர் குமார் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.


Click it and Unblock the Notifications