"ஒய்டு யார்க்கர்" டெத் ஓவரில் மிரட்டிய வாரிசு..முதல் விக்கெட்டை வீழ்த்தி அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல்
ஐதராபாத்: மும்பை அணியின் இளம் வீரரும், சச்சின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று ஓவர்களை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதில் 9 டாட் பால்களும் அடங்கும்.
16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணி தரப்பில் ஹாரி ப்ரூக் - மயங்க் அகர்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. மும்பை அணி சார்பாக முதல் ஓவரை சச்சினின் மகனும், இளம் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும், பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கடைசி ஓவரை வீச அர்ஜுன் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ஒய்டு யார்க்கரை சிறப்பாக வீசிய அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் தனது விக்கெட்டாக புவனேஷ்வர் குமாரை வீழ்த்தினார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் 2 ஓவர்களை மட்டும் வீசிய அர்ஜுன் டெண்டுலர் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். பவர் பிளே ஓவர்களில் இப்படி சிக்கனமாக பந்துவீசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அர்ஜுன் டெண்டுல்கர் ரன் அப்பில் உள்ள பிரச்சனை, 120 கிமீ மட்டுமே வேகம் என சில பிரச்சனை இருந்தாலும், ரன்கள் விட்டுக் கொடுக்காமல் பந்துவீசுகிறார். மும்பை அணி நிர்வாகம் தரப்பில் அர்ஜுன் டெண்டுல்கரை முன் திட்டத்தோடு களமிறக்கி வருகிறது. அர்ஜுன் டெண்டுல்கரின் வேலையாக பவர் பிளே ஓவர்களுக்குள் 2 ஓவர்களை சிக்கனமாக வீச வைப்பது தான். அதனை அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாகவே செய்து வருகிறார். ஆர்ச்சர் இல்லாத சூழலில், மும்பை அணிக்கு தேவையான தொடக்கத்தை பந்துவீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications