மும்பை: ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் வலிமையான ராஜஸ்தான் அணியை எதிர்த்து 5 முறை சாம்பியனான மும்பை அணி விளையாட உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் விளையாடப்படும் 1000வது போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் மும்பை அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது. இதற்கு மும்பை அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் ஃபார்ம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டெத் ஓவர்களில் மும்பை அணியின் எகனாமி 12க்கு அதிகமாக இருந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், அந்த அணிக்கு தலைவலியாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மும்பை அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடுவதை பட்லர் வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அர்ஜுன் டெண்டுல்கர், மெரிடித், பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப் ஆகியோர் எப்படி பட்லரை தடுக்க போகிறார்கள் என்பதே முக்கிய கேள்வியாக அமைந்துள்ளது. சுமாரான பவுலிங் அட்டாக் வைத்துள்ள சென்னை அணியையே புரட்டி எடுத்த ராஜஸ்தான், மோசமான பவுலிங் அட்டாக்கை வைத்து மும்பை அணியின் பந்துவீச்சை சிதைத்தாலும் ஆச்சரியமல்ல. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ளது.
அந்த அணியில் ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மயர், படிக்கல், துருவ் ஜூரெல் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் கன்னி வெடி போல் வெடிக்க பேட்ஸ்மேன்கள் காத்திருக்கிறார்கள். அதேபோல் பந்து வீச்சில் சாஹல், அஸ்வின், போல்ட், சந்தீப் ஷர்மா, ஹோல்டரும் மிரட்டி வருகிறார்கள். இதுவரை இந்த இரு அணிகளும் விளையாடியுள்ள 26 போட்டிகளில் 14ல் மும்பையும், 12ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன. அதேபோல் கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்றுள்ள போட்டியில் மும்பை அணி 2015ஆம் ஆண்டு தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.