மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று பலம் வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. எனினும் கடந்த மூன்று சீசன்களாக அந்த அணி ஒரு முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதுதான் பிரச்சனைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
மேலும் குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து மும்பை அணி கேப்டனாக நியமித்திருக்கிறது. இது அந்த அணியில் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் ரோகித் சர்மாவுக்கு பிறகு தாங்கள்தான் கேப்டனாக வரப் போகிறோம் என்று பும்ரா, சூரியகுமார் ஆகியோர் நினைத்திருந்தனர். ஏற்கனவே வெளிப்படையாக ரோகித் சர்மாவின் குடும்பத்தினர் மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சித்து பல பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதுவரை ஒரு முறை கூட ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதேபோன்று சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அம்பானி குடும்பத்தினருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் இந்த மூன்று வீரர்களும் இணைந்து ஒரு கூட்டு சதியில் ஈடுபட போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் தமக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி ஐபிஎல் தொடரிலிருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று சூரிய குமார் தற்போது ஏற்கனவே காயம் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கிற்காமல் இருக்கிறார். தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதியை மீட்கும் பணியில் இருக்கிறார்.
இதனால் அவரும் ஐபிஎல் தொடரில் கம்பி நீட்டி விடலாம் என்று இருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார். மூன்றாவது டெஸ்டில் ஓய்வு எடுத்துக்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் வேண்டாம் நான் தொடர்ந்து விளையாடுகிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் போது தமக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி சில போட்டிகளில் விளையாடாமல் இருக்கலாம் என்றும் அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் இந்த மூன்று வீரர்களும் இல்லை என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை மிகப்பெரிய அளவில் பாதிக்க வைக்கும். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு பாடம் கற்பிக்கலாம் என்று இந்த மூன்று வீரர்களும் முடிவெடுத்து இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்போ இல்லை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிக் கொண்டிருக்கும்போதோ காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி இந்த மூன்று வீரர்களும் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.