மும்பை : மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியதற்கான காரணம் குறித்த கேள்விக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மார்க் பவுச்சர் இருவரும் அமைதி காத்தது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே மும்பை அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா திடீரென டிரேட் மூலமாக மும்பை அணிக்கு மீண்டும் திரும்பினார். அதுமட்டுமல்லாமல் டிரேடிங் செய்யும் காலம் முடிவடைந்த ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

இதனால் மும்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி 3வது இடத்தில் நிறைவு செய்திருந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மட்டுமே மும்பை அணிக்கு திரும்புவேன் என்று தீவிரமாக இருந்ததாக தகவல் வெளியாகியது. அதுமட்டுமல்லாமல் ஒப்பந்தத்திலேயே கேப்டன் என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் மும்பை அணியை பொளந்து கட்டினர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் மார்க் பவுச்சர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மார்க் பவுச்சர் இருவருமே பதில் அளிக்காமல் அமைதி காத்தனர். இந்த வீடியோ மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கம் நேரலையில் வெளியாகி ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வந்தது.
அதேபோல் ஒப்பந்தத்திலேயே கேப்டனாக மட்டுமே மும்பை அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய போது, அங்கிருந்த மும்பை அணி நிர்வாகிகள் சர்ச்சையாக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மாவுடன் பேசவில்லை என்று ஹர்திக் பாண்டியா நேரடியாக ஒத்துக் கொண்டுள்ள நிலையில், மும்பை அணி ரசிகர்கள் பலரும் கடுமையாக பாண்டியாவை விமர்சித்து வருகின்றனர்.