கிறிஸ்துமஸை கொண்டாடிய குரு - சிஷ்யன்.. எப்போ பாரு தோனி கூடயே இருக்காரே.. ஒருவேளை அப்படி இருக்குமோ!
ராஞ்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சிஎஸ்கே கேப்டன் தோனியின் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், நூலிழையில் உயிர் தப்பினார். அவர் சென்ற கார் சம்பவ இடத்திலேயே தீ பிடித்து எரிந்தது. இதன்பின் அருகில் சென்றவர்களால் காப்பாற்றப்பட்ட ரிஷப் பண்ட், பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அதன்பின் ரிஷப் பண்ட் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார். அவ்வப்போது ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளராக தலையை காட்டினாலும், 6 மாதங்களுக்கு பின் என்சிஏவில் பயிற்சியை தொடங்கினார். அவர் உடல்நிலைக்கு ஏற்ப சிறிய அளவிலான பயிற்சியையே ரிஷப் பண்ட் செய்ய தொடங்கினார்.
இதன்பின் என்சிஏவில் நடத்தப்பட்ட சில பயிற்சி போட்டிகளில் பங்கேற்ற ரிஷப் பண்ட், அடுத்த பிப்ரிவரி மாதத்திற்குள் முழு ஃபிட்னஸை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி அணிக்காக சில மணி நேரம் ரிஷப் பண்ட் ஏலத்தில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்பது உறுதியானது. அதன்பின் அன்றைய இரவிலேயே துபாயில் தோனியுடன் ரிஷப் பண்ட் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகின. துபாயில் தோனியுடன் ரிஷப் பண்ட் இருந்தது ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட்டில் தோனி ஓய்வை அறிவித்த பின் அவரது இடத்திற்கு வந்தவர் ரிஷப் பண்ட். தோனியின் ரசிகரான ரிஷப் பண்ட், அவரை தனது குருவாக கொண்டாடி வருகிறார். அண்மை காலங்களில் தோனியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வரும் ரிஷப் பண்ட், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தோனியின் குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார். இது தோனியின் மகள் ஸிவா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் வெளி வந்துள்ளது.
இதனால் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விரைவில் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் சீசன் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்ததாக தோனியின் இடத்திற்கு ரிஷப் பண்ட் கொண்டு வரப்படலாம் என்று ரசிகர்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளது.
Story first published: Monday, December 25, 2023, 22:13 [IST]
Other articles published on Dec 25, 2023


Click it and Unblock the Notifications