மும்பை : மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் மீண்டும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படத் துவங்கி உள்ளன. தங்கள் அணியின் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மாவை பதவியில் இருந்து நீக்கி விட்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு மாற வைத்து கேப்டனாக ஆக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த மாற்றத்தை ரோஹித் சர்மா ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அவர் இதுவரை புதிதாக நியமிக்கபட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பாராட்டுக்கள் எதையும் கூறவில்லை. மேலும், இந்த கேப்டன்சி மாற்றம் நிகழ்ந்த போது ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரோஹித் சர்மா குறித்த பதிவு ஒன்றை லைக் செய்து இருந்தார். அதன் மூலம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தன் எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேனாக பயன்படுத்துமா? அல்லது கேப்டன் பதவியில் இருந்து மட்டுமின்றி பிளேயிங் லெவனில் கூட வாய்ப்பு அளிக்காமல் அவரை வெளியேற்றுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த ஐபிஎல் விவகாரத்தில் இந்திய டி20 அணியின் எதிர்காலமும் சேர்ந்தே சிக்கி இருந்தது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக அப்போது பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. அதனால், ரோஹித் சர்மா ஒரே நேரத்தில் ஐபிஎல் அணி மற்றும் டி20 அணியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை இருந்தது. இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் ரோஹித் சர்மா தன் பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டும். அதற்காக 2024 ஐபிஎல் தொடரை பயன்படுத்தலாம், அப்போது ரன் குவித்து தன் டி20 ஃபார்மை நிரூபித்து ஓராண்டுக்கு பின் இந்திய டி20 அணியில் இடம் பெறலாம் என ரோஹித் சர்மா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், ஐபிஎல் அணியில் தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்குமா? என்ற கேள்வி அவருக்கு இருந்தது. இதை அடுத்தே அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் பங்கேற்றார் என அப்போது பேசப்பட்டது. அந்த தொடரில் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன அவர், மூன்றாவது போட்டியில் சதம் அடித்து தன் ஃபார்மை நிரூபித்து இந்திய டி20 அணியில் தன்னை அசைக்க முடியாது என்பதை வெளிக்காட்டினார்.
இனி மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் வாய்ப்பு கொடுத்தாலும் இல்லை என்றாலும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் தான் தான் கேப்டன் என்பதை அவர் உறுதி செய்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ரோஹித் சர்மாவிடம் ஆலோசித்தே கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கினோம் என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அவரது பேச்சில் நிறைய தவறு இருப்பதாக ரோஹித் சர்மா மனைவி ரித்திகா கூறியதை அடுத்து அந்த பேட்டி இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.