அப்படி வா ராசா வழிக்கு..! எனக்கு ஆதரவு கொடுங்க.. வீடியோ போட்டு கெஞ்சிய ஹர்திக் பாண்டியா
Hardik Pandya : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைவரின் கவனமும் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் அந்த அணியில் கேப்டன்கள் மாறியதுதான். ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் அணியில் இருந்து திரும்பிய ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது.
மேலும் ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொண்டுதான் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் அணியில் இருந்து வெளியேறிய வீரருக்கு மீண்டும் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இது மும்பை வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரை ரோகித் சர்மா வாயைத் திறந்து ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறவில்லை. மேலும் ரோகித் சர்மா மீது கோபத்தில் இருக்கும் இஷான் கிஷனும், ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பயிற்சி செய்து வருகிறார். மறுபுறம் பும்ரா சூரியகுமார் யாதவ் ஆகியோர் வெளிப்படையாகவே ரோகித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் மும்பை அணியில் பெரிய விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் எனக்கு வழங்கும் ஆதரவுக்கும் அன்புக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இந்த ஆசீர்வாதத்தை வார்த்தையால் என்னால் விவரிக்க முடியவில்லை.
என்னுடைய கிரிக்கெட் பயணம் எங்கு ஆரம்பித்ததோ அங்கே திரும்பவும் வந்திருக்கிறேன். ஒரு சிறுவனாக பரோடாவில் இருந்து புறப்பட்டு மும்பை வந்தேன். இந்த மும்பை நகரம் தான் எனக்கு வளர்ச்சி, வாழ்க்கை, போராட்ட குணம் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. இந்த நகரம் எனக்கு கொடுத்த அன்பும் பாடத்தையும் நான் என்றென்றும் மறக்க மாட்டேன்.
அது விலை மதிப்பு மிக்கது. அதுதான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை கட்டமைத்தது. மும்பை அணி எப்போதுமே உங்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும். இதன் மூலம் நீங்கள் வளர்ந்து வருவீர்கள். தற்போது ஐபிஎல் தொடரில் நான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்கு வந்திருக்கிறேன். எனக்கு முழு ஆதரவை அனைவரும் வழங்க வேண்டும்.
ரசிகர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் நிச்சயம் இந்த சீசன் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும். உங்களுடைய ஆதரவை நான் நிச்சயம் எதிர்பார்க்கிறேன். இந்த பயணத்தை நாம் அனைவரும் மகிழ்ச்சியாக எதிர்கொண்டு ஒன்றாக பயணிப்போம் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications