மும்பை : மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட பின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இதுவரை பேசவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இந்த சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, திடீரென டிரேட் மூலமாக மும்பை அணிக்கு இடம்பெயர்ந்ததோடு, கேப்டன்சி பதவியையும் பெற்றுள்ளார்.

இதனால் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வரும் போது, மும்பை அணி எதிர்காலத்தை சிந்தித்து ஹர்திக்கை நியமித்துள்ளது. இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் மும்பை அணி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உடன் இணைந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் ரசிகர்களின் கோபம் மற்றும் ரோகித் சர்மாவின் பதவிக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணி ரசிகர்களின் எமோஷன் எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மும்பை அணியின் கேப்டனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது பணியாகும்.
மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட பின், ரோகித் சர்மாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அவர் மும்பை அணியில் இணைந்த பின் நிச்சயம் அவருடன் ஆலோசிப்பேன். இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். அது எனக்கு மட்டுமல்லாமல் இந்த அணிக்கும் உதவியாக அமைந்துள்ளது. அவரின் கேப்டன்சிக்கு கீழ் மும்பை படைத்துள்ள சாதனைகளை நான் முன் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு கீழ் விளையாடி இருக்கிறேன்.
எனது தோள்களில் ரோகித் சர்மா கை எப்போதும் இருக்கும். கேப்டனாக நான் தடுமாறும் போது எனக்கு உதவியாக ரோகித் சர்மா நிச்சயம் இருப்பார். ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக செயல்படுவதில் எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. அதேபோல் 2015ஆம் ஆண்டு முதல் நான் கற்றுக் கொண்ட அனைத்திற்கும் தொடக்கமாக மும்பை அணி தான் இருந்தது. மும்பை அணியில் இணைந்த பின்னரே எனது வாழ்க்கையும் மாறியது. இந்த அளவிற்கு உயரத்தை எட்டுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. மீண்டும் எனக்கு பிடித்த மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.