IPL 2024 : ரசிகர்கள் செய்த அந்த செயல்.. ஓய்வறையில் கண்ணீர்விட்டு கதறிய ரிஷப் பண்ட்..காரணமே தோனி தான்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் ரசிகர்களால் இளம் வீரர் ரிஷப் பண்ட் ஓய்வறையில் தனியே அமர்ந்து கண்ணீர்விட்டு கதறியதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 11 அரைசதங்கள் உட்பட 2,271 ரன்களை விளாசியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா ஏற்படுத்திய தாக்கத்தை விடவும் இளம் வயதிலேயே ரிஷப் பண்ட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கியதால், ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார்.

அடுத்ததாக நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக இந்திய ஜாம்பவான் தோனியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார் ரிஷப் பண்ட். தோனியின் குடும்ப நிகழ்ச்சிகள், விடுமுறை பயணம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றிலும் ரிஷப் பண்ட் பயணித்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தோனியால் தனியறையில் கண்ணீர்விட்ட சம்பவம் குறித்து ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார். அதில், மொஹாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவவிட்டேன். அப்போது அனைத்து ரசிகர்களும் ஒன்றாக சேர்ந்து தோனி.. தோனி என்று கோஷம் எழுப்ப தொடங்கினார்கள். அந்த இன்னிங்ஸ் முடிந்ததும் ஏமாற்றத்துடன் ஓய்வறைக்கு சென்ற போது, கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். 20 அல்லது 21 வயது தான் எனக்கு அப்போது இருக்கும். அந்த அழுத்தத்தின் போது என்ன செய்வதென்று கூட எனக்கு தெரியவில்லை.
5 போட்டிகள் மட்டுமே ஆடிய என்னை 500 போட்டிகளுக்கு மேல் விளையாடிய தோனியுடன் ஏன் ஒப்பிடுகிறார்கள் என்றே புரியவில்லை. தோனியின் பயணம் நீண்ட ஒன்று. அதனால் அந்த ஒப்பீடு தவறு என்று புரிவதற்கே எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. அதேபோல் இப்போது தோனியுடன் நெருங்கிய நட்பில் உள்ளேன். கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் என்னால் அவருடன் ஆலோசிக்க முடிகிறது. அதுபோன்ற விஷயங்கள் குறித்து வேறு யாருடனும் என்னால் ஆலோசிக்க முடியாது.


Click it and Unblock the Notifications