மும்பை : மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவை ஐதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி எச்சரித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால், அவர்களை கேப்டன் ஹர்திக் பாண்டியா எவ்வாறு கையாளப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இஷான் கிஷன், திலக் வர்மா, கோட்சியே, டின் டேவிட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் ரோகித் சர்மா, பியூஷ் சாவ்லா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்களின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலமாக இதனை வெளிப்படையாகவே ரசிகர்களுக்கு உணர்த்தி வருகின்றனர். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி அக்னி பரீட்சையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஐதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி பேசுகையில், ஹர்திக் பாண்டியாவுக்கு மிகச்சிறந்த அணி அமைந்துள்ளது. அதனால் அவரின் ஆட்டத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கேப்டன்சி என்பது வேறு வகையான பிரஷரை அளிக்கும். சில நேரங்களில் 2 முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தால், கேப்டன்சியில் உள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டி விமர்சிக்க தொடங்குவார்கள்.
களத்தில் சூழலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்து காட்டமாக விமர்சிப்பார்கள். நாம் வெற்றிபெறும் போது வினோதமான முடிவுகளை கூட எடுக்கலாம். அப்போது நமது முடிவுகளை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். குஜராத் அணியை வழிநடத்திய அனுபவம் ஹர்திக் பாண்டியாவுக்கு உள்ளது. அதனால் சீனியர் வீரர்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் ஆதரவு அவருக்கு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை அணி கோப்பையை வென்று 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காகவே ஹர்திக் பாண்டியாவை பெரும் தொகை கொடுத்து அணிக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அவரின் செயல்பாடுகளும், மும்பை அணியின் செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.