IPL 2024 - இனி ரோகித் சர்மாவால் அணி மாற முடியுமா? டிரேடிங் விதிமுறைகள் என்ன? முழு விவரம் இங்கே!
மும்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை மாற்றி கொள்வதற்கான டிரேடிங் முறைக்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இனியும் வீரர்களால் பல்வேறு அணிகளுக்கு மாற முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதில் இருந்து ரோகித் சர்மா அணி மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் ரோகித் சர்மாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் மும்பை அணி ரோகித் சர்மாவை கொடுக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை மறுநாள் துபாயில் நடக்கவுள்ளது. இதனால் 5 நாட்களுக்கு முன்பாக டிச.12ஆம் தேதியே வீரர்களை டிரேடிங் செய்து கொள்வதற்கான அவகாசம் முடிவுக்கு வந்தது. இதனால் இனி டிரேடிங் முறையில் அணிகளால் வீரர்களை மாற்ற முடியாது என்ற பார்க்கப்பட்டது. அப்படியிருக்கும் போது எப்படி ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களால் மாற்று அணிக்கு செல்ல முடியும் என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் டிரேடிங் விதிமுறைகளின்படி, இனி ஏலம் முடியும் வரை மட்டுமே வீரர்களை டிரேட் செய்ய கூடாது என்று தெரிய வந்துள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடர் முடிவடைந்து 7 நாட்களுக்கு பின் வீரர்களுக்கான டிரான்ஸ்ஃபர் முறை தொடங்கும். அது ஐபிஎல் ஏலத்திற்கு 7 நாட்களுக்கு முன்பாக முடிவுக்கு கொண்டு வரப்படும்.
அதன்பின் ஐபிஎல் ஏலம் முடிவடைந்த பின்னர், மீண்டும் வீரர்களை மாற்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான டிரேடிங் முறை மீண்டும் தொடங்கும். எந்த அணியாவது வேறு வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தால், சம்மந்தப்பட்ட அணி நிர்வாகங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த டிரேடிங் முறை ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன் முடிவுக்கு வரும்.
இதனால் ரோகித் சர்மா மட்டுமல்லாமல் எந்த வீரரை வேண்டுமானாலும் அணி நிர்வாகங்கள் ஒப்பந்தங்கள் மூலமாக வீரர்களை மாற்றி கொள்ள முடியும். மும்பை அணியின் சீனியர் வீரர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதவி வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருப்பதால், மினி ஏலத்திற்கு பின்னரும் பரபரப்பு அடங்காது என்றே பார்க்கப்படுகிறது.
Story first published: Sunday, December 17, 2023, 11:37 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications